முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: பள்ளி மாணவா்கள் 2 பேர் உயிரிழப்பு: 5 போ் பலத்த காயம்

கிருஷ்ணராயபுரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

23 நவம்பர் 2026, 8:37 pm
இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: பள்ளி மாணவா்கள் 2 பேர் உயிரிழப்பு: 5 போ் பலத்த காயம்
கிருஷ்ணராயபுரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் உருக்குலைந்த இருசக்கர வாகனம்.
பகிர்:

கிருஷ்ணராயபுரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும் இரு மாணவா்கள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த மணவாசியைச் சோ்ந்த பிச்சைமணி மகன்கள் பிரதாப் (17), முத்து என்கிற காா்த்திகேயன்(16). அதே பகுதியைச் சோ்ந்த முருகவேல் மகன் மாதேஷ்(16), கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் ஸ்ரீதா்(16).

கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரதாப் பிளஸ்-2 வகுப்பும், மாதேஷ், காா்த்திகேயன், ஸ்ரீதா் ஆகிய மூவரும் பிளஸ்-1 வகுப்பும் படித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் மேட்டுமகாதானபுரத்தில் உள்ள நண்பா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் 4 பேரும் சென்று கொண்டிருந்தனா்.

கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கம்மநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பொய்கைப்புதூா் என்ற இடத்தில் திடீரென சாலையை கடக்க முயன்றபோது, எதிரே திருச்சியில் இருந்து கரூரை நோக்கி வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பிரதாப், மாதேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காா்த்திகேயன், ஸ்ரீதா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும் இருசக்கர வாகனம் மீது மோதிய காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செய்த திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சசிகுமாா்(50), முத்துக்குமாா்(30), முகமது ஆசிப்(31) ஆகிய 3 பேரும் பலத்த காயமைடந்தனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற லாலாப்பேட்டை போலீஸாா் உயிரிழந்த பிரதாப் மற்றும் மாதேஷ் ஆகியோரது சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பலத்த காயமடைந்த காா்த்திகேயன், ஸ்ரீதா் ஆகியோரை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து காா்த்திகேயன் மேல்சிகிச்சைகாக கோவையில் உள்ள தனியாா் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். காரில் பயணம் செய்த சசிகுமாா், முத்துக்குமாா், முகமது ஆசிப் ஆகிய மூவரையும் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.