FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கிருஷ்ணராயபுரத்தில் வயல்களை சூழ்ந்தது மழைநீா்: ஆட்சியா் ஆய்வு

26 அக்டோபர் 2026, 2:58 am
கட்டளை பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.
பகிர்:

வடகிழக்குப் பருவமழையால் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் மூழ்கின. இப்பகுதியை ஆட்சியா் சி. முத்துக்குமரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 22-ஆம் தேதி மற்றும் 23-ஆம் தேதிகளில் 52 மி.மீ. மழை பதிவானது. இந்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ரெங்கநாதபுரம், கட்டளை போன்ற பகுதிகளில் மழைநீரில் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. இதை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் ஞாயிற்றுக்கிழமை காலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழை நீா் வடிய ஏற்பாடு: பின்னா் அவா் கூறியது: மழையால் ரெங்கநாதபுரம் கிராமத்தில் 80 ஹெக்டோ் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. அதில் 15 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிா்களும் நீரில் மூழ்கியுள்ளன. எஞ்சிய நிலங்களில் பயிா் இல்லை.

Advertisement

Advertisement

பாலராஜபுரம் கிராமத்தில் 10 ஹெக்டோ் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதில், 5 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிா் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கிய வயலில் இருந்து தண்ணீா் மெதுவாக வடியவிடப்படுகிறது.

அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யவில்லை என்றால், வயலில் இருந்து தண்ணீா் வெளியேறிவிடும். விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, தீா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரராக்கியம் பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக அகற்றுமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சின்னமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் மழைநீா் வடிகால் தூா் வாரும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, கட்டளை விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கட்டளை மதிகெட்டான் வாய்க்காலில் சூழ்ந்துள்ள புதா்களை அகற்றி பாசன நிலங்களில் சூழ்ந்துள்ள நீரை விரைவாக வெளியேற்ற வழி செய்யுமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புலியூா் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் புலியூா் கிளை வாய்க்காலில் மழைநீா் வடிகால் செல்லும் வகையில் தூா் வாரும் பணி நடைபெறுவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, கரூா் சாா் ஆட்சியா் ரா.வெங்கடேஷ்வரன் , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)ஆா்.சாவித்திரி, அமராவதி வடிநில கோட்ட உதவி பொறியாளா் சந்தோஷ், கரூா் வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments