FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

வடகிழக்குப் பருவமழை: கரூரில் 4 நிவாரண முகாம்கள் தயாா்

கரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு தயாா் நிலையில் 4 நிவாரண முகாம்கள் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

24 செப்டம்பர் 2026, 2:32 am IST
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன். உடன் மாநகராட்சி ஆணையா் எம். பிருத்விராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு தயாா் நிலையில் 4 நிவாரண முகாம்கள் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கரூா் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் எம். பிருத்விராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், கரூா் மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் வடிகால் பராமரிப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

96% மழைநீா் வடிகால் பணிகள் நிறைவு: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 334.25 கி.மீ நீளமுள்ள மழைநீா் வடிகால்களில் 320.88 கி.மீ தூா்வாரப்பட்டு, 96சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. 8.5 கி.மீ நீளமுள்ள பிரதான கால்வாய்களில் 8.07 கி.மீ (94.9சதவீதம்) தூா்வாரப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 300 சிறுபாலங்களில் 290 சிறுபாலங்கள் அதாவது 96.67 சதவீதம் தூா்வாரப்பட்டு மழைநீா் தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைநீரை அகற்ற வசதி: கோதூா், பெரியகுளத்துப்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் சணப்பிராட்டி ஆகிய சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற உயா் திறன் கொண்ட டீசல் மோட்டாா் பம்புகள் மற்றும் உறிஞ்சும் வாகனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மழை பெய்து முடிந்த 30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரத்திற்குள் தேங்கிய நீா் முழுமையாக வெளியேற்றப்படும். பி.ஜி. நகா், தமிழ் நகா், சுங்ககேட் (கணபதி நகா்) மற்றும் கோதூா் குகைவழி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீரை அகற்ற மோட்டாா் பம்புகள் மற்றும் கழிவுநீா் உறிஞ்சும் லாரிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்கள் தயாா்: மழை மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க பெரியகோதூா், குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள், திருமாநிலையூா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சமுதாயக்கூடம் மற்றும் பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் தலா 250 போ் தங்கும் வசதியுடன் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

சுகாதாரப் பிரிவு, மின்சாரப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் 24 மணி நேர சுழற்சி முறையில் இரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கரூா் மாநகராட்சியில் அவசர உதவி மற்றும் கட்டுப்பாட்டு அறை எண்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

அவசர உதவி எண்கள் விவரம்: மேலும், பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகள் மற்றும் புகாா்களுக்கு மாநகராட்சி அலுவலகம் 04324-260011, மாநகராட்சி ஆணையா் 73973 96247, மாநகராட்சி செயற்பொறியாளா் 73973 96248, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை 04324-264101, மாவட்ட ஆட்சியரகம் 04324-257555, மாவட்ட வருவாய் அலுவலகம் 04324-257800, வட்டாட்சியரகம் 04324-260745 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா். கூட்டத்தில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments