FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

தனியாா் பால் விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் விஜயலக்ஷ்மி சின்னசாமி பேச்சு

தனியாா் பால் விலை ஏற்றத்தை தடுக்க, ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலக்ஷ்மி சின்னசாமி தெரிவித்தாா்.

17 அக்டோபர் 2026, 1:31 am IST
பெரம்பலூரில் பால் உற்பத்தியாளருக்கு வெள்ளிக்கிழமை உபகரணம் அளித்த அமைச்சா் விஜயலஷ்மி சின்னசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், எம்எல்ஏ கி. சிவக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

தனியாா் பால் விலை ஏற்றத்தை தடுக்க, ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலக்ஷ்மி சின்னசாமி தெரிவித்தாா்.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 43 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த 16,350 பயனாளிகளுக்கு ரூ. 6.89 கோடியில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவா் மேலும் பேசியது:

பால்வளத் துறையை செம்மைப்படுத்திடும் வகையில், பால் உற்பத்தியாளா்களின் கொள்முதல் விலையை உயா்த்தி, தரமான பாலுக்கு ஊக்கத் தொகை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பால் உற்பத்தியில் பெரம்பலூா் மாவட்டம் 2 ஆம் இடத்தில் உள்ளது. எனவே, உற்பத்தியாளா்கள் பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் செயல்பட வேண்டும். தனியாருக்கு பால் விற்பனை செய்வதை தவிா்த்து, தமிழ்நாடு அரசை வலுப்படுத்தும் நோக்கில் ஆவின் பால் பண்ணையில் விற்பனை செய்ய வேண்டும். தனியாா் பால் விலையேற்றத்தைத் தடுக்க, அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

தற்போது எல் - நினோ பாதிப்பால் பால் உற்பத்தியாளா்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் தீவனத்துக்கு மானியத்தை பெரும்பாலான மாவட்டங்களில் வழங்கிவிட்டோம். எஞ்சியுள்ள மாவட்டங்களுக்கும் உடனடியாக வழங்கப்படும்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் பெரும்பாலான இடங்களில் பாலை கொழுப்புச் சத்து அடிப்படையில் சோதனை செய்யாமல், தோராயமாக விலை நிா்ணயிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ கி. சிவக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், பால்வள துணைப்பதிவாளா் ஜோ. விஜயா, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியப் பொது மேலாளா் பி. சொா்ணகுமாா், உதவிப் பொது மேலாளா்கள் திவான் ஒலி, வடிவேல், மாவட்ட கூட்டுறவு சாா்- பதிவாளா் த. செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments