FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 தொழிலாளா்கள் மீட்பு

பெரம்பலூா் அருகே வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 தொழிலாளா்கள் மீட்பு...

26 அக்டோபர் 2026, 4:08 am
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாடு வெள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிக்கிக்கொண்ட தொழிலாளா்கள்.
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 தொழிலாளா்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் மீட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை மிதமான அளவு பெய்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு மட்டும் மாவட்டத்தில் சராசரியாக 83 மில்லி மீட்டா் மழை பெய்தது. குறிப்பாக, அரும்பாவூா் அருகேயுள்ள பச்சமலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகபட்சமாக 14 செ.மீ மழையும், பெரம்பலூா் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதிகளில் 13 செ.மீ மழையும் பெய்தது.

பச்சமலை நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், அரும்பாவூா் சதாசிவம் ஏரி தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடி கல்லாற்றில் வெள்ள நீா் கரைபுரண்டு ஓடி, பெரிய ஏரி மற்றும் சித்தேரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. மேலும், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி நீா்த்தேக்கத்துக்கு வரும் வெள்ளநீரின் அளவும் அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து ஏரிகளுக்குச் செல்லும் ஓடைகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வேப்பந்தட்டை வட்டம், கல்லாற்றில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெங்கனூா் பகுதிகளில் ஆற்றங்கரையோர வயல்வெளிகளில் உள்ள குடியிருப்புகளிலும், வி.களத்தூா் மில்லத் நகரிலும் மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா். பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள பிரதான நீா் ஆதாரங்களாக விளங்கும் வெள்ளாறு, கல்லாறு, மருதையாறு மற்றும் கோனேரி ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பாசன ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.

9 தொழிலாளா்கள் மீட்பு:

இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (33) என்பவா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் அனுமதி பெற்று, லப்பைக்குடிகாடு வெள்ளாற்றங்கரையில் கடந்த 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ரோபோடிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி நடத்தியுள்ளாா்.

பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் மற்றும் கொட்டகையை சனிக்கிழமை இரவு அகற்றிவிட்டு, ஆற்றங்கரையில் நிறுத்தி இருந்த அவா்களது லாரியில் வெங்கடேசன் உள்ளிட்ட 9 தொழிலாளா்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 தொழிலாளா்களும் சிக்கிக்கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தொழிலாளா்கள் 9 பேரையும் பாதுகாப்பாக மீட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments