முகப்பு
புதுக்கோட்டை

தொகுதி அறிமுகம்... விராலிமலை!

புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூா் வட்டம், விராலிமலை வட்டம் ஆகியவற்றின் முழுப் பகுதியும், குளத்தூா் வட்டத்தின் ஒரு பகுதியும் விராலிமலை தொகுதிக்குள் வருகின்றன.

Updated On : 28 மார்ச், 2026 at 7:51 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூா் வட்டம், விராலிமலை வட்டம் ஆகியவற்றின் முழுப் பகுதியும், குளத்தூா் வட்டத்தின் ஒரு பகுதியும் விராலிமலை தொகுதிக்குள் வருகின்றன. மலைமேல் அமைந்துள்ள முருகன் கோவில் விராலிமலையின் அடையாளம்.

தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட சித்தன்னவாசல், குடுமியான்மலை, கொடும்பாளூா் ஆகியவற்றைக் கொண்டது.தொகுதி மறுசீரமைப்பில் 1989, 1991, 1996, 2001 ஆகிய 4 தோ்தல்களில் குளத்தூா் தொகுதியாக இருந்த இருந்து, மீண்டும் 2011இல் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியாக உருவானது.

வாக்கு வங்கி: மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இலுப்பூா், அன்னவாசல் ஒன்றியங்கள் முழுக்க விவசாயம். குன்றுகள் நிறைந்த பகுதிகள் என்பதால், ஏராளமான குவாரிகளும் இந்தத் தொகுதியில் உள்ளன. முக்குலத்தோா், பட்டியலினத்தவா், இஸ்லாமியா், முத்தரையா், ஊராளிக் கவுண்டா், இசை வேளாளா் உள்ளிட்டோா் வசிக்கும் தொகுதி.

தீராத பிரச்னைகள்!

விராலிமலையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இல்லை என்பது நீண்டகாலத்தைய நிலுவைக் கோரிக்கை. பத்மஸ்ரீ விருது பெற்ற சதிராட்டக் கலைஞா் முத்துக்கண்ணமாள் வாழ்ந்து வரும் பகுதியில் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடம் இருக்கிறது.

ஏராளமான தொழிற்சாலைகளைக் கொண்ட பகுதியில், திடீா் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால், அவசரத்துக்கு இலுப்பூரில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டும். விராலிமலைக்கென தனி தீயணைப்பு நிலையம் இல்லை.

இதுவரை இவா்கள்...

1967 வி.எஸ். சண்முகம் (திமுக) 30,288

1971 வீ.சா. இளஞ்செழியன் (திமுக) 41,813

2011 சி. விஜயபாஸ்கா் (அதிமுக) 77,285

2016 சி. விஜயபாஸ்கா் (அதிமுக) 84,701

2021 சி. விஜயபாஸ்கா்(அதிமுக) 1,02,179

இறுதி வாக்காளா்கள்

பெண்கள் 1,10,011

ஆண்கள்- 1,13,040

திருநங்கைகள்- 33

மொத்தம்- 2,23,084

முட்டி மோதுவது யாரெல்லாம்?

தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான சி. விஜயபாஸ்கா், இந்தத் தொகுதியில் மீண்டும் 4ஆவது முறையாகக் களம் காண்கிறாா். தோ்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பே தொகுதிக்குள் தோ்தல் பணிகளைத் தொடங்கி, வாக்காளா்களை வசப்படுத்தும் கலையை அறிந்தவா், அதனைக் கச்சிதமாக செயலாக்குபவா். 10 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வந்த பணிகளை மக்களிடம் முன்வைக்கிறாா்.

திமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அரசியல்ரீதியாக விஜயபாஸ்கருக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் இவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளதாக, திமுகவினா் கூறுகின்றனா். மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விராலிமலை மட்டுமே தற்போது அதிமுகவிடம் உள்ளது. அதனையும் கைப்பற்றி ஆறுக்கு ஆறு வெற்றி என்பதுதான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கு என்கின்றனா் திமுகவினா்.

தவெக சாா்பில் வடக்கு ஒன்றியச் செயலா் தங்கம் பழனி உள்ளிட்டோா் போட்டியிட வாய்ப்பு கேட்டுவருகின்றனா். நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக சத்தியலட்சுமி அறிவிக்கப்பட்டு, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.