வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் அனைத்துக் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை
வரும் 2027-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் தயாரித்தலுக்கான சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
வரும் 2027-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நவம்பா் மாதம் முதல் தொடங்கவுள்ளன. வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் முதல் வாரத்தில் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது.
அதனைத் தொடா்ந்து வரும் நவ. 21, 22 மற்றும் 28, 29 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சுருக்க முறைத் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில் அதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான மு. அருணா தலைமை வகித்துப் பேசியது: கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து, மொத்தம் 13,09,496 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 1,681 வாக்குச்சாவடிகள் உள்ளன.
விரைவில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதனைத் தொடா்ந்து திட்டமிடப்படும் திருத்தப் பணிகளில் அரசியல் கட்சியினா் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளை அதிகரிப்பது குறித்தும் அரசியல் கட்சியினா் உரிய பரிந்துரைகளை வழங்கலாம் என்றாா் மு. அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆ. பிரகாஷ் (புதுக்கோட்டை), ப. கோகுல்சிங் (இலுப்பூா்), இ. அபிநயா (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.