குடந்தை நகர்மன்ற கூட்டம்துணைத் தலைவருக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு தலைவர் ரத்னாசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜாநடராஜன், ஆணையர் உமாமகேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான என். தர்மபாலன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
சு.ப.தமிழழகன்(திமுக): இந்த அவசரக் கூட்டத்தில் 101 பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. எத்தனை உறுப்பினர்கள் அதை முழுமையாக படித்திருப்பார்கள் என தெரியவில்லை.
ராஜாநடராஜன் (துணைத்தலைவர்): மகாமகத்துக்கு பிறகு இந்த அவசரக்கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். ஒவ்வொரு பொருளையும் படித்த பிறகு சந்தேகமிருந்தால் கேளுங்கள். அதற்கு பதில் அளிக்கப்படும்.
தட்சிணாமூர்த்தி, தமிழழகன் (திமுக): பட்ஜெட்டிற்கு என தனி கூட்டம் நடத்துங்கள். குட்டி தெட்சிணாமூர்த்தி (திமுக): வரவு, செலவு திட்டம் சுருக்கம் என கூறி வந்துள்ளது. அதை முழுவதும் படித்து பார்க்க வேண்டாமா?.
அப்போது, திமுக உறுப்பினர்கள் தமிழழகன், ரவிச்சந்திரன், சுப்ரமணியன் மற்றும் பெண் உறுப்பினர்கள் ஆகியோர் எழுந்து பேசினர். அதற்கு பதிலளிக்க அதிமுக உறுப்பினர்கள் ராஜூ உள்ளிட்டோரும் எழுந்து பேசியதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.
ராஜாநடராஜன் (துணைத்தலைவர்): தீர்மானங்களை நிறைவேற்றிட அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகர்மன்றத் தலைவரின் இருக்கைக்கு முன்பாக நின்று கொண்டு, துணைத் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
ராஜாநடராஜன் (துணைத்தலைவர்): திமுக உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றிட அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.
தலைவர்: அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்தது என கூறிவிட்டு, எழுந்து சென்றுவிட்டார்.
திமுக உறுப்பினர்கள் துணைத் தலைவர் ராஜாநடராஜனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.