"மொரிசியசில் பேச்சுத் தமிழை மீட்போம்'
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணையுடன் மொரிசியசில் பேச்சுத் தமிழை மீட்டெடுப்போம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணையுடன் மொரிசியசில் பேச்சுத் தமிழை மீட்டெடுப்போம் என்றார் மொரிசியஸ் நாட்டின் மகாத்மா காந்தி ஆய்வு நிறுவனத் தமிழ்த் துறைத் தலைவர் உமாதேவி அழகிரி.
இப்பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையும், கல்வியியல் துறையும் இணைந்து மொரிசியசில் தமிழ்க் கற்றலும் கற்பித்தலும் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடத்திய கல்வியரங்கத்தில் அவர் பேசியது:
மொரிசியசில் கி.பி. 1728 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் வாணிபம் செய்து வருகின்றனர். கி.பி. 1835-க்குப் பிறகு ஒப்பந்தத் தொழிலாளர்கள் கரும்பு வயல்களில் பணிபுரிய வந்தனர். அக்காலத்திலேயே திண்ணைப் பள்ளிகளில் தமிழ்க் கற்றுக் கொடுக்கப்பட்டது. 1980-கள் வரை ஓங்கி இருந்த தமிழ்க் கல்வி பின்னர், ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல் மொழிகளின் வளர்ச்சி காரணமாகப் பாதிப்படைந்தது. இதனால், தற்போது பேச்சுத்தமிழையும் இழந்து வரும் வேதனையான சூழ்நிலை நிலவுகிறது. தொடக்கநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு வரை தமிழைக் கற்கும் வாய்ப்புகள் இருந்தும் வீட்டு மொழி என்ற சிறப்பைத் தமிழ் இழந்து வருகிறது. கல்வி நிலையிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் தமிழாசிரியர் பயிற்சிகள் வாயிலாக அங்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் மீண்டும் பேச்சுத்தமிழை ஏற்படுத்தும் முயற்சியை முன்னெடுப்போம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் பேசுகையில், மொரிசியசில் தமிழ் மீண்டும் முழுமையாக மலர எல்லா வகையிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் துணை நிற்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், பேராசிரியர் பழனிவேலு, கல்வியியல் துறைத் தலைவர் சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.