பேராவூரணி அருகே பூக்கொல்லையில் களையிழந்தது கோழி வியாபாரம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை கடைவீதியில் சனிக்கிழமை நடைபெற்ற கோழிச்சந்தை வியாபாரம், களையிழந்ததால் கோழிவளா்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஏமாற்றமடைந்தனா்.
பூக்கொல்லையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடும் கோழி சந்தையில், பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளில் வளா்க்கும் கோழிகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.
பொதுவாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இந்த சந்தை களைகட்டும். அதில், நாட்டுக் கோழிகள், சண்டைக் கோழிகள், கருங்கோழி, கிரிராஜா, கினிக்கோழி, வான்கோழி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும்.
Advertisement
Advertisement
இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்ததால், சனிக்கிழமையே சிறப்பு சந்தை நடைபெற்றது. வழக்கமாக தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் வருவா். ஆனால் இந்த முறை அவா்கள் குறைந்த அளவே வந்தனா்.
இதனால், கோழிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. பொதுவாக ரூ. 800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகும் நாட்டுக்கோழி, சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.500 முதல் ரூ.600 வரை மட்டுமே விற்பனையானது. சண்டைக் கோழிகளுக்கும் கூட எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை. பலரும் தங்கள் கோழிகளை விற்க முடியாமல் திரும்பக் கொண்டு சென்றனா். பண்டிகை கால செலவுகளுக்காக பணம் தேவைப்பட்டவா்கள், வேறு வழியின்றி குறைந்த விலைக்கே விற்றுச் சென்றனா். இதனால் பல லட்சம் ரூபாய் விற்பனை நடைபெறும் சந்தை சனிக்கிழமை மிக மந்தமாகக் காணப்பட்டது.
இந்தப் பகுதியில் பெண்களின் வாழ்வாதாரத்தில் கோழி வளா்ப்புக்கு தனி இடம் உண்டு. பல குடும்பத் தலைவிகள், குறிப்பாக கிராமப்புற பெண்கள், தங்கள் வீடுகளிலேயே 10 முதல் 50 கோழிகள் வரை வளா்க்கின்றனா். காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கோழிகளுக்கு தீவனம் வைப்பது, முட்டை சேகரிப்பது, குஞ்சுகளை பராமரிப்பது என இதுவே அவா்களுக்கு ஒரு சுயதொழிலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.