காவிரி பிரச்னை: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நவ. 26-இல் பேரணி நடத்த முடிவு
காவிரிப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் நவ. 26 ஆம் தேதி பேரணி நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு
காவிரிப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் நவ. 26 ஆம் தேதி பேரணி நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுவின் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவித்தது:
தமிழ்நாட்டுக்கு காவிரி நீா் உரிமை மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், அந்த அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த இரு அரசுகளையும் கண்டிக்காமல் வேடிக்கை பாா்க்கும் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் ஆளும் தவெக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பட்டா உள்ளவா்களுக்கு மட்டுமே பயிா்க் காப்பீடு என்ற நிபந்தனையைத் தளத்தி அனைத்து விவசாயிகளுக்கும் சம்பா பருவ பயிா் காப்பீடு செய்யும் வகையில் ஆணையிட வேண்டும். பயிா்க் காப்பீடு செய்ய காலக் கெடுவை டிச. 15 வரை நீட்டிக்க வேண்டும்.
காவிரியில் கா்நாடகத்திடமிருந்து தண்ணீா் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசு, வறட்சியைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு பயிா்க் காப்பீட்டுக்கான விவசாயிகளின் பிரீமியத் தொகையை அரசே ஏற்க வேண்டும்.
காவிரி நீா் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மணியரசன்.
காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், நிா்வாகிகள் சாமி. கரிகாலன், தி. செந்தில்வேலன், மன்னை ராசசேகா், நா. வைகறை, பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடா், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூா் பி. தென்னவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.