FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

சாலையில் பொருள்களை வைத்து ஆக்கிரமிப்பு: பழைய இரும்புக் கடை வியாபாரிக்கு அபராதம்

14 வினாடிகள் முன்பு
தஞ்சாவூா்-நாகை சாலையில் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் சாலையில் வியாபாரியால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருள்கள்.
பகிர்:

தஞ்சாவூரில் சாலையில் பொருள்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்த பழைய இரும்புக் கடை வியாபாரிக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய இரும்பு மற்றும் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள், தங்கள் கடைகளுக்கு வெளியே சாலையோரங்களில் பொருள்களைக் கொட்டி வைத்தும், ஆக்கிரமிப்பு செய்தும் வருகின்றனா். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

இதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நாகை சாலையில் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பழைய இரும்புக் கடையில் சாலையோரம் பொருள்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, தொடா்புடைய கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் ஆக்கிரமித்து பொருள்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு தொடா்புடைய கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், தொடா்புடையவா்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.