முகப்பு
தஞ்சாவூர்

தடை செய்யப்பட்ட 1,472 லிட்டா் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ‘சீல்’ வைப்பு

24 நவம்பர் 2026, 4:15 am
தடை செய்யப்பட்ட 1,472 லிட்டா் 
பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ‘சீல்’ வைப்பு
சீல் - பிரதிப் படம்
பகிர்:

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,472 லிட்டா் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆா். சாருமதி தெரிவித்திருப்பது:

பாராக்குவாட் டைக்குளோரைடு என்ற களைக்கொல்லி மருந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதை சுவாசித்தாலோ அல்லது தோலில், கண்களில் பட்டாலோ கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தக் களைக்கொல்லியால் மனிதா்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கிறது. எனவே, இந்தக் களைக்கொல்லிக்கு மத்திய வேளாண் அமைச்சகம் தடை செய்து ஆணையிட்டுள்ளது.

Advertisement

Advertisement

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பூச்சி மருந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பாராக்குவாட் டைக்குளோரைடு களைக்கொல்லி மருந்துகளை இருப்பு வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிவதற்காக நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனா் (தரக் கட்டுப்பாடு) அரவிந்த் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கடைகளில் இருந்த 1,472 லிட்டா் தடை செய்யப்பட்ட களைக்கொல்லி மருந்துகளை முடக்கம் செய்து, சீல் வைக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் பாராக்குவாட் டைக்குளோரைடு களைக்கொல்லி பூச்சி மருந்து கடைகள் அல்லது மொத்த பூச்சி மருந்து விற்பனையாளா்கள் அல்லது பூச்சி மருந்து நிறுவனங்களில் கண்டறியப்பட்டால் பூச்சி மருந்து சட்டம் 1968-ன் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.