முகப்பு
தஞ்சாவூர்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணை: அமைச்சா் அருண்ராஜ் பேச்சு

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவத் திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்.

27 நவம்பர் 2026, 2:46 am
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணை: அமைச்சா் அருண்ராஜ் பேச்சு
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்.
பகிர்:

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவத் திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை பல்வேறு இடங்களில் ரூ. 3.68 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்து, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 39 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அவா் பேசியது:

பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் ரூ. 78.20 லட்சத்திலும், பெரியகோட்டையில் ரூ. 88.20 லட்சத்திலும், பெருமகளூரில் ரூ. 60 லட்சத்திலும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கூடுதல் கட்டடம், அழகியநாயகிபுரத்தில் ரூ. 65 லட்சத்தில் பொது சுகாதார அலகு கட்டடம், கீழக்குறிச்சியில் ரூ. 45 லட்சத்திலும், திருச்சேறையில் ரூ. 41.35 லட்சத்திலும் துணை சுகாதார மையக் கட்டடம் ஆகிய 6 கட்டடங்கள் ரூ. 3.68 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ரூ. 56.47 கோடியில் 107 அறிவிப்புகள்: நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 56.47 கோடியில் 107 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவ உபகரணங்கள் ரூ. 7.52 கோடியில் சிறப்பு மருத்துவ உபகரணங்கள், ரூ. 5.42 கோடியில் இதய சிகிச்சைக்கான கேத்லேப், இதய நுரையீரல் இயந்திரங்கள், ரூ. 3 கோடியில் அவசர சிகிச்சை, உள், வெளி நோயாளா் பிரிவுகள் மேம்பாடு, ரூ. 2.96 கோடியில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை மையங்கள், நவீன இயந்திரங்கள், ரூ. 2.75 கோடியில் மண்டல, மாவட்ட தடுப்பூசி சேமிப்பகங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளன. பல திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களுக்கு விரைவில் அறிவிப்புகள் கொண்டு வந்து, 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

1,697 புதிய செவிலியா் பணியிடங்கள்: அனைத்து மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் 4,724 காலிப் பணியிடங்களை மாவட்ட நலச் சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் 39 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பட்ஜெட்டில் அறிவித்தபடி, 1,697 புதிய செவிலியா் பணியிடங்களை உருவாக்கி, அதற்கும் அறிவிப்பாணை வழங்கப்பட்டு, தோ்தெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. விரைவில் அவா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநா் ச. உமா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநா் சீதாலெட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் கே. பாலசுப்ரமணியன், தமிழ்நாடு மருந்துகள் சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குநா் எஸ்.பி. அம்ரித், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சோ்ப்பு வாரிய தலைவா் ஆா். அழகுமீனா, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஏ. அரவிந்த், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஏ. ராஜ்மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் கே. சோமசுந்தரம், குடும்ப நல இயக்குநா் திலகம், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.