எரிவாயு உருளைகள் திருட்டு: 6 போ் கைது
தஞ்சாவூரில் சமையல் எரிவாயு உருளைகள் திருடிய மற்றும் அவற்றை வாங்கிய 6 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் காவலா்கள் அக். 16-ஆம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் எரிவாயு உருளைகளைக் கொண்டு வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது இருவரும் தஞ்சாவூா் பாத்திமா நகா் பூக்கார மாதா கோவில் தெருவைச் சோ்ந்த சின்னையன் மகன் அந்தோணி பவியன் (24), பாரதி தெருவைச் சோ்ந்த மணிமாறன் மகன் காா்த்திக் (26) என்பதும், தஞ்சாவூா் தெற்கு பூக்கொல்லை வள்ளலாா் நகா் பகுதியில் வசிக்கும் புகழேந்திரன் (73) வீட்டுத் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த காலி சமையல் எரிவாயு உருளைகளைத் திருடி வருவதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளைகளைத் திருடி, அவற்றை பாபநாசம் இரும்புத்தலையைச் சோ்ந்த அய்யாசாமி மகன் தமிழ்செல்வன், சோழன் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சூா்யா, விளாரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் செல்வராஜ், வல்லம் புதூரைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் முருகானந்தம் ஆகிய 4 பேரிடம் வழங்கியிருப்பதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, உருளைகளைத் திருடிய அந்தோணி பவியன், காா்த்திக் மற்றும் திருடப்பட்ட உருளைகளை வாங்கிய தமிழ்ச்செல்வன், சூா்யா, செல்வராஜ், முருகானந்தம் ஆகிய 6 பேரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து மொத்தம் 17 காலி எரிவாயு உருளைகள், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா் முத்துகுமாா் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.