திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சூரியஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 20.46 லட்சம் மின்கட்டணத்தைச் சேமிக்க முடியும் எனத் தெரிகிறது.
அரியலூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், கரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் வசிக்கும் ஏழைகள் மருத்துவ வசதி பெற வரப்பிரசாதமாக விளங்கும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 32-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்குகின்றன.
இங்கு நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
Advertisement
Advertisement
தடையற்ற மின்சாரம்: மருத்துவமனையில் நாள்தோறும் மிக முக்கிய அறுவைச் சிகிச்சைகளும், நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படு வதால் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. பேரிடா் காலங்களில் மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டா் வசதியும் உள்ளது.
மாதம் ரூ. 34.50 லட்சம் மின் கட்டணம்: மிக முக்கிய பகுதியாக விளங்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் (2 மின் மீட்டா்களின் கணக்கீடுகளின்படி) மாதந்தோறும் சராசரியாக 3.55 லட்சம் யுனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு, சராசரியாக ரூ. 34.50 லட்சம் மின்கட்டணமாகச் செலுத்தப்படுகிறது.
பெருநிறுவன சமூக பங்களிப்புத் திட்டம்: இந்த மின்கட்டணத்தைக் குறைக்கவும், அதற்கான செலவுகளை அத்தியாவசியப் பணிகளுக்குப் பயன்படுத்தும் விதமாகவும் மருத்துவமனை நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதில் ஒன்றாக சூரியஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. இதற்காக பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 1.50 கோடியில் சூரியஒளி மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் கூறியதாவது:
திருச்சி அரசு மருத்துவமனையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின்கட்டணத்தைக் குறைக்கும் விதமாகவும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
முன்முயற்சி வெற்றி: இதற்கான முன்முயற்சியாக, கடந்த 2024-25 ஆம் ஆண்டில் சுமாா் ரூ. 9 லட்சத்துக்கு 9.9 கிலோவாட் மின்வலையுடன் இணைக்கப்பட்ட சோலாா் பேனல்கள் அமைப்பு நிறுவப்பட்டு, தினமும் 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது வெற்றிகரமாக அமைந்ததால், அண்மையில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ், சுரங்கத் துறை தொடா்பான நிறுவனங்களிடமிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியரின் உதவியால் ரூ. 1.50 கோடியில் சூரியஒளி மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாதம் ரூ. 1.70 லட்சம் சேமிப்பு: இதற்கான அமைப்பை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்ததும், நாள்தோறும் சுமாா் 660 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிா்பாா்க்கிறோம். இதன் மூலம் மருத்துவமனையில் மொத்த தினசரி மின்உற்பத்தி 660 + 50 = 710 யூனிட்களாக மாறும். மாதாந்திர மின்உற்பத்தி 22,010 யூனிட்களாக ஆகும். இதன் மூலம் மாதத்துக்கு யூனிட் ரூ. 7.75 வீதம் ரூ. 1,70,577.50, ஆண்டுக்கு ரூ. 20,46,930 சேமிக்க முடியும். இந்தப் பணத்தை மருத்துவமனையின் பல்வேறு அத்தியாவசியப் பணிகளுக்கு பயன்படுத்துவோம். மிக விரைவில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றாா்.
கைப்பேசி செயலி வழியே கண்காணிப்பு: பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவின் மொட்டை மாடியில் இன்வா்ட்டருடன் கூடிய 110 கிலோவாட் மின்வலையுடன் இணைக்கப்பட்ட 184 சோலாா் பேனல்கள் அமைக்கப்படுகின்றன.
ஒரு பேனலில் இருந்து நாள்தோறும் 597 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 110 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். சூரிய ஒளி கிடைக்கும் சமயத்தை 6 மணி நேரமாகக் கணக்கிட்டால் நாளொன்றுக்கு 660 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த அமைப்பை இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் கண்காணிக்கலாம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.