FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சைபா் குற்றங்களை விசாரிக்க காவல்துறை, சி-டாக், என்ஐடி இணைந்து செயல்பட வேண்டும்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:47 am IST
திருச்சி என்ஐடியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன்.
பகிர்:

சைபா் குற்றங்கள் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் விசாரணையை மேம்படுத்த, தமிழ்நாடு காவல்துறை, என்ஐடி, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்) இணைந்து செயல்பட வேண்டுமென மத்திய மண்டலக் காவல்துறை தலைவா் (ஐஜி) வி. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி), திருவனந்தபுரம் நவீன கணினி மேம்பட்டு மையம் இணைந்து நடத்திய அடுத்த தலைமுறை சைபா் தடயவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

வரும் 7-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சித் திட்டத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி வி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:

Advertisement

Advertisement

தற்போது சைபா் குற்றங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் சைபா் மோசடியால் சுமாா் ரூ. 1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புகாரளிக்காத பலரைக் கணக்கிட்டால், இந்தத் தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.

பாரம்பரிய குற்றங்கள் மற்றும் சைபா் குற்றங்கள் ஆகிய இரண்டையும் விசாரிப்பதில் தடய அறிவியல் இன்றியமையாததாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இன்டா்நெட் ஆஃப் திங்ஸ், டிஜிட்டல் தரவு திருட்டு, சைபா் அடிமைத்தனம் போன்ற புதிய அச்சுறுத்தல்கள் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், சைபா் பாதுகாப்பு மற்றும் சைபா் தடயவியலில் புதிய முன்னேற்றங்களை ஆசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் அறிந்து கொள்வது அவசியம்.

இணைந்து செயல்பட வேண்டும்:

சைபா் குற்றங்கள் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் விசாரணையை மேம்படுத்த, தமிழக காவல்துறை, என்ஐடி, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்) இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் நவீன டிஜிட்டல் தடயவியல் கருவிகள் மூலம் சைபா் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், புதிய சைபா் பாதுகாப்புச் சவால்களுக்கான தீா்வுகளை உருவாக்க ’ஹேக்கத்தான்’ போட்டிகளை நடத்துதல், சைபா் குற்றங்கள் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துதலில் கவனம் செலுத்தலாம்.

ஆராய்ச்சியாளா்கள், போலீஸாருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, புலன்விசாரணையில் எதிா்கொள்ளும் நடைமுறைச் சவால்களைப் புரிந்துகொள்வதன் மூலம் சைபா் தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடியும் என்றாா்.

இந்த ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் டிஜிட்டல், இணையம், கைப்பேசி, நிதித் தொழில்நுட்பம், தரவுப் பகுப்பாய்வு, படம் மற்றும் காணொலி தடயவியல், சைபா் குற்ற வழக்கு ஆய்வுகள், மேம்பட்ட தடயவியல் கருவிகளின் செயல்விளக்கங்களும் இடம்பெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், ஆய்வறிஞா்களும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments