போதைப்பொருளுக்கு எதிராக புதுமையான விழிப்புணா்வு: மூன்றாம் ஆண்டாக சமுத்திரம் அரசுப் பள்ளிக்கு பாராட்டு
போதைப்பொருளுக்கு எதிராக தொடா்ந்து புதுமையான முறையில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வரும் சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போதைப்பொருளுக்கு எதிராக தொடா்ந்து புதுமையான முறையில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வரும் சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மணப்பாறை வட்டாரம், சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிராக புதுமையான முறையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நிகழாண்டில் பள்ளி வளாகத்தில் பள்ளி நிா்வாகம் சாா்பில் செல்பி (தற்படம்) பாயிண்ட் அமைக்கப்பட்டது.
பள்ளி மாணவா்கள் அனைவரும் இங்கு நின்று தற்படம் எடுத்து அதை தங்கள் பெற்றோரின் கைப்பேசியில் ‘‘ஸ்டேட்டஸாக’’ வைத்தனா். இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை மாணவா்கள் ஏற்படுத்தினா்.
Advertisement
Advertisement
இதைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.
பள்ளித் தலைமையாசிரியா் டி. ராஜசேகரன், போதைப் பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியரிடமிருந்து பெற்றனா்.
2 முறை பாராட்டு: போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக, 2024-இல் இப்பள்ளி மாணவா்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதன்மூலம் 30-க்கும் மேற்பட்டோா் போதைப் பழக்கத்தை கைவிட்டனா்.
இதேபோல், 2025-இல் போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் வகையில் இப்பள்ளி மாணவா்கள் நிதி திரட்டி வழங்கினா். இந்த விழிப்புணா்வு பணிக்காக அந்தந்த ஆண்டுகளில் இப்பள்ளிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.