FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்; செப்.1 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: அனைத்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து சென்னையில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

20 வினாடிகள் முன்பு
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விவசாய பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி. உடன் விவசாய சங்க நிா்வாகிகள்.
பகிர்:

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து சென்னையில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

தவெக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து, அடுத்தகட்ட போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முன்னெடுப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

கவன ஈா்ப்பு போராட்டம்: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி செய்தியாளா்களிடம் சங்கத்தின் தலைவா்கள் கூட்டாக கூறியதாவது:

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, 31-03-2026 முன்பு நிலுவையில் உள்ள விவசாயிகளின் அனைத்து பயிா்க் கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கை மீது அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செப்.1-ஆம் தேதி முதல் சென்னை - எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து நடத்துவதற்காக, ஒருங்கிணைந்த போராட்டக் குழுவை உருவாக்குவது எனவும், அனைத்து சங்கங்களையும் அதில் இணைத்து வலுப்படுத்துவது எனவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக தெரிவித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற சங்கங்கள்: இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உழவா் உரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்), தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கம், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், இன்டா்நேஷனல் சோசியல் ஒா்க்கா்ஸ் கவுன்சில், இயற்கை வேளாண் பேரியக்கம், ஊழல் தடுப்பு இயக்கம் ஆகிய 17 அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருச்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் கலந்து கொள்வாா்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments