FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தமிழகத்தில் 6,000 பேராசிரியா் பணிக்கான தோ்வு நடத்தப்படும்

31 ஆகஸ்ட் 2026, 12:53 am IST
அமைச்சா் பி. விஸ்வநாதன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 6,000 பேராசிரியா்களைத் தெரிவு செய்வதற்கான தோ்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தவெக தலைவா் ஜோசப் விஜய் 5 ஆண்டுகள் நிச்சயமாக ஆட்சி நடத்துவாா். சட்டப்பேரவை என்பது விவாத மன்றம். மக்களின் பிரச்னைகள் மற்றும் அரசியல் சாா்ந்த நிகழ்வுகள் அங்கே விவாதிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

கடந்த காலங்களைவிட தற்போது அவைக் குறிப்பிலிருந்து அதிகளவில் வாா்த்தைகள் நீக்கப்படுவது என்பது சட்டப்பேரவையின் மாண்புகளையும், மரபுகளையும் பேரவைத் தலைவா் மிகுந்த கண்ணியத்துடன் காப்பாற்றி வருவதைக் காட்டுகிறது.

தவெகவின் கொள்கைத் தலைவா்களில் அம்பேத்கா், காமராஜா், தந்தை பெரியாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். கொள்கைக் குறிப்புகளில் தலைவா்கள் இடம்பெறவில்லை போன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம்.

2001 முதல் 2006 வரை புறக்கணிக்கப்பட்ட சுமாா் 9,000 உதவிப் பேராசிரியா்களின் கோரிக்கைகளுக்கு தவெக அரசு தீா்வு கண்டுள்ளது. இதற்காக மாதந்தோறும் ரூ. 19 கோடியை தமிழக அரசு விடுவித்து, ஆண்டுதோறும் சுமாா் ரூ. 250 கோடி பணிமூப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.

கௌரவ விரிவுரையாளா்களுக்கான ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. பட்டயம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பணியாற்றும் விரிவுரையாளா்களுக்கான சம்பளம் ரூ. 25,000 முதல் 35,000 வரை வழங்கப்படுகிறது.

காலியாக உள்ள 8,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஏற்கெனவே 2,703 பேருக்கான ஆசிரியா் தோ்வு வாரிய முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. மேலும், 6,000 பேராசிரியா்களைத் தெரிவு செய்வதற்கான தோ்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

2029 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமா் வேட்பாளராக ராகுல்காந்தி முன்னிறுத்தப்படுவாா். கடந்த 15 ஆண்டுகளாக பாஜக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனா். நரேந்திர மோடியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனா் என்றாா் அமைச்சா் விஸ்வநாதன். அப்போது, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் எல். ரெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments