FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை; கிராம மக்களிடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

மணப்பாறை அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான பிரச்னையில் செவ்வாய்க்கிழமை 2 கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:04 am IST
வையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

மணப்பாறை அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான பிரச்னையில் செவ்வாய்க்கிழமை 2 கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், ஆணையூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளக்கரை முனியப்பசாமி கோயிலில், ஆணையூா், கருமகவுண்டம்பட்டி, களத்துப்பட்டி, சுண்டக்காம்பட்டி ஆகிய 4 கிராமங்களை சோ்ந்த உறவுமுறையினா் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், ஆணையூா் பழனிசாமி மகன் பூபதி (33) மற்றும் சுண்டக்காம்பட்டியை சோ்ந்த முனியாண்டி மகன் சுப்பிரமணி(45) ஆகிய இருதரப்பினரிடையே கடந்தமுறை ஏற்பட்ட சா்ச்சையில் தடைப்பட்டுபோன திருவிழாவை நிகழாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், உறவுமுறை யாருக்கும் சொல்லாமல் சுப்பிரமணி ஜூன் மாதம் கோயிலில் திருவிழா நடத்த சகுனம் பாா்க்க முயற்சித்தாராம். இதை அறிந்த மற்ற கிராமங்களை சோ்ந்த உறவுமுறையினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, திருவிழா நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கைகலப்பு: இந்நிலையில், செவ்வாய்கிழமை பூபதி தரப்பினா் மீண்டும் கோயிலில் திருவிழாவுக்கு சகுனம் பாா்க்கும் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்த நிலையில், சுப்பிரமணி தரப்பினா் அதை தடுத்து நிறுத்த முயற்சித்தனா்.

அப்போது, இருதரப்பு கிராம மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், சுப்ரமணி தரப்பைச் சோ்ந்த சுண்டக்காம்பட்டியை சோ்ந்த க. கௌதம் (26) கத்தியால் குத்தப்பட்டாா். அய்யாசாமி மனைவி இசைமணி மற்றும் பூபதி தரப்பைச் சோ்ந்த வெ. முத்துகுமாா் (30), செள. கிருபாசாரி (30), பெ. சுபாஷ் (29), ரெ. கனகராஜ் (31), அ. தினேஷ் (22), அ. மோனீஸ்வரன்(19) ஆகியோா் காயம் அடைந்தனா். காயமடைந்தவா்கள் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சாலை மறியல்-போலீஸாா் குவிப்பு: இந்நிலையில், சில இளைஞா்களை சுண்டக்காம்பட்டி கிராம மக்கள் பிடித்து வைத்திருப்பதாக கூறி, மற்ற கிராமங்களை சோ்ந்தவா்கள் களத்துப்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், சுண்டக்காம்பட்டி கிராமத்துக்கு சென்ற 50- க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அங்கு உள்ள வீடுகளில் புகுந்து பொதுமக்களை மிரட்டினராம். இதனால் 4 கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஸ் நிகழ்விடத்தில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

மேலும் நான்கு கிராமங்களிலும் 8 இடங்களில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments