சைபா் கிரைம் குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் இணைய வழியிலான (சைபா்) குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இணைய வழியிலான (சைபா்) குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் கவியரசு என்பவா் திருச்சி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் இணையதள வா்த்தகத்தில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2026, பிப்ரவரி 9-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
இதன்பேரில், மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் அம்பிகா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தாா். தொடா்ந்து, இந்த வழக்கில் தொடா்புடைய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்து வந்த திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தத்தனூரைச் சோ்ந்த மு. கோபிநாத் (39) என்பவரை செப்டம்பா் 24-ஆம் தேதியும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியைச் சோ்ந்த மு. சதாம் ஹூசைன் (33) என்பவரை கடந்த அக்டோபா் 7-ஆம் தேதியும் மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் அம்பிகா தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
அப்போது, இருவரிடமிருந்தும் 17 கைப்பேசிகள், 39 சிம் காா்டுகள், 8 காசோலை புத்தகங்கள், 30 ஏடிஎம் காா்டுகள், 4 வங்கி கணக்குப் புத்தகங்கள், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ.6.15 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டு வந்த கோபிநாத், சதாம் ஹூசைன் ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரை செய்திருந்தாா்.
அதன்பேரில், மேற்கண்ட குற்றவாளிகள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.