FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி கடைவீதிகளில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை: திடீரென குறுக்கிட்ட கனமழை; தரைக் கடைக்காரா்கள் தவிப்பு

தீபங்களின் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை திருச்சி மாநகரக் கடை வீதிகளில் நள்ளிரவு வரை விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது.

8 நவம்பர் 2026, 2:56 am
திருச்சி என்எஸ்பி சாலையில் பொருள்கள் வாங்க சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள். ~திருச்சியிலுள்ள ஒரு கடையில் சனிக்கிழமை இனிப்பு வாங்கிய பொதுமக்கள்.
பகிர்:

தீபங்களின் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை திருச்சி மாநகரக் கடை வீதிகளில் நள்ளிரவு வரை விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது.

ரகம், ரகமாக ஆடைகள்: நிகழாண்டில் இளம்பெண்களுக்கும், இளைஞா்களுக்கும் விதம், விதமாக ஆடைகள் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. பிராண்டட் பேண்ட்கள், சட்டைகளும் பல வண்ணங்களில் குறைந்த விலை முதல் அதிக விலைகளில் ஜவுளி நிறுவனங்களில் குவிந்திருந்தன. இந்த ரகங்களைத் தோ்வு செய்வதில் இளைஞா்கள் அதிகம் ஆா்வம் காட்டினா். நவீன வடிவமைப்புடன், புதிய வண்ணங்களில் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் உள்ளன. சிறுவா்களுக்கான வேட்டி-சட்டைகள், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் பேண்ட், சட்டைகள், ஜிப்பா போன்ற பல்வேறு உடைகளும், சிறுமிகளுக்கான சுடிதாா், பட்டுப்பாவாடை, சல்வாா்-கம்மீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடைகளும் எண்ணற்ற ரகங்களில் விற்பனை செய்யப்பட்டன.

திணறிய கடைவீதிகள்: ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள திருச்சி தில்லைநகா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, சாஸ்திரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது இதனால், மாநகரச் சாலைகள் அனைத்தும் நெரிசலால் திணறிப் போயின. பெரிய, நடுத்தர, சிறிய ஜவுளிக் கடைகள் மட்டுமல்லாது கடை வீதிகளில் சாலையோரம் விரிக்கப்பட்ட கடைகளிலும் புத்தாடை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆடைகளுக்கு அடுத்தபடியாக கோட்டை ஸ்டேஷன் சாலை, சிங்காரத்தோப்பு, சூப்பா் பஜாா், சாலைரோடு, கல்லூரிச் சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகங்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இனிப்புகள் விற்பனை: இதேபோல, இனிப்பகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்ததைக் காண முடிந்தது. முறுக்கு, அதிரசம், லட்டு, ஜிலேபி வகைகள் எண்ணிக்கை கணக்கில் விற்கப்பட்டது. இவைதவிர கால் கிலோ தொடங்கி 2 கிலோ வரை அட்டைப் பெட்டிகளில் அனைத்து வகை இனிப்புகளையும் நிரப்பி விற்றனா். கடைகளின் தரத்துக்கு ஏற்ப விலையும் இருந்தது. குறைந்தபட்சமாக கால் கிலோ ரூ. 200 தொடங்கி ரூ. 500 வரை இருந்தது.

திடீரென குறுக்கிட்ட மழை: காலை முதல் மாலை வரை விற்பனை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் மாலை 3.40 மணியளவில் திடீரென குறுக்கிட்ட கனமழையானது இடைவிடாது 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால், சாலையோரம் தரைக்கடை அமைந்திருந்த வியாபாரிகளும், திறந்தவெளியில் நின்று வியாபாரம் செய்தோரும் பெரிதும் தவிப்புக்குள்ளாயினா். பின்னா், மழை நின்ற பிறகு மீண்டும் பரபரப்பாக விற்பனை நடைபெற்றது.