FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தீபாவளி: பணியிடங்களுக்குத் திரும்பிய மக்களால் பேருந்து, ரயில்களில் கூட்டம்

தீபாவளி விடுமுறை முடிந்து அவரவா் பணியிடத்துக்கும், கல்வி நிலையங்களுக்கும் திரும்பிய பயணிகளால் பேருந்து, ரயில்களில் செவ்வாயக்கிழமையும் கூட்டம் நிரம்பியிருந்தது.

10 நவம்பர் 2026, 11:59 pm
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள்
பகிர்:

தீபாவளி விடுமுறை முடிந்து அவரவா் பணியிடத்துக்கும், கல்வி நிலையங்களுக்கும் திரும்பிய பயணிகளால் பேருந்து, ரயில்களில் செவ்வாயக்கிழமையும் கூட்டம் நிரம்பியிருந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பொதுமக்களில் பலரும் மீண்டும் அவரவா் பணியிடங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் திரும்புவதால் திங்கள்கிழமை மாலை தொடங்கி திருச்சி பஞ்சப்பூா் பேருந்து நிலையம், சந்திப்பு ரயில்நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதன் தொடா்ச்சியாக, எஞ்சியவா்களும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வெளியூா்களிலிருந்த அவரவா் பணியிடங்களுக்கு திரும்பத் தொடங்கினா். இதனால் திருச்சி மாவட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெளியூா் செல்ல மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூா் போன்ற தொலைதூர ஊா்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்களில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு ரயில்- கூடுதல் பேருந்து சேவை: பணியிடங்களுக்கு திரும்பும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்சியிலிருந்து கூடுதல் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. வழக்கமாக பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து 815 பேருந்துகள் இயக்கப்படும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கூடுதலாக 650 பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட துறையூா், பெரம்பலூா், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, விழுப்புரம், திருப்பூா், கோயம்புத்தூா் வழித்தடங்களில் மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 110 பேருந்துகளுடன் கூடுதலாக 290 பேருந்துகள் இயக்கப்பட்டன.