FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பஞ்சப்பூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி டிசம்பரில் நிறைவடையும்: அரசு செயலா் தகவல்

பஞ்சப்பூரில் ரூ.226 கோடியில் கட்டப்படும் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை செயலருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.

13 நவம்பர் 2026, 2:39 am
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் காய்கறி அங்காடி பணிகளை வியாழக்கிழமை பாா்வை யிட்ட நகராட்சி நிா்வாகத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி. உடன் மாநகராட்சி ஆணையா் பொன்மணி உள்ளிட்டோா்.
பகிர்:

பஞ்சப்பூரில் ரூ.226 கோடியில் கட்டப்படும் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை செயலருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.

பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி, கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து விளக்கமளித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

பஞ்சப்பூரில் 22.10 ஏக்கரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில், பெரியாா் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. ஒப்பந்த காலத்துக்குள்ளாக பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, பஞ்சப்பூரில் நவீன தொழில்நுட்பத்தில் ரூ.226.35 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் 100 எம்எல்டி கொள்ளளவு கொண்டதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்.

இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வருகையில், மாநகரப் பகுதியில் சேகரமாகும் கழிவுநீா் அனைத்தும் முறையாக சுத்திகரித்து வெளியேற்றப்படும் என்றாா் அவா். தொடா்ந்து, பசுமைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளையும் அவா் நட்டு வைத்தாா்.

முன்னதாக, பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆய்வு செய்து, வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்க அறிவுரை வழங்கினாா். கனரக சரக்கு வாகன முனையத்தையும் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி மற்றும் மாநகராட்சி பொறியாளா்கள், ஒப்பந்த நிறுவனத்தினா் உடன் இருந்தனா்.