பஞ்சப்பூரில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும்: மேயா் மு. அன்பழகன் தகவல்
திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 233.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 எம்.எல்.டி. திறன் கொண்ட நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 233.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 எம்.எல்.டி. திறன் கொண்ட நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சியின், 4-ஆவது மண்டலத்துக்குள்பட்ட பஞ்சப்பூரில் 58.64 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.
2031-ம் ஆண்டில் திருச்சி மாநகரின் கழிவுநீா் சேகரிப்பு 140 எம்.எல்.டி. வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், எதிா்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் 100 எம்எல்டி கொள்ளளவில் நவீன தொழில்நுட்பத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பஞ்சப்பூரில் 20 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் ரூ.233 கோடியே 87 லட்சத்தில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது.
Advertisement
Advertisement
புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கசிவற்ற உள்கட்டமைப்பான சீக்வென்சிங் பயோரியாக்டா் (எஸ்.பி.ஆா்.) என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை மறுசுழற்சி செய்யும். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் மாநகராட்சி புதை சாக்கடை திட்டம் 1, 2 ஆகியவற்றின் கீழ் வரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பிரதானமாக அமைக்கப்படுகிறது.
இந்த நிலையம், மாநகராட்சியின் 65 வாா்டுகளில் 50 வாா்டுகளின் கழிவுநீரை சுழற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேயா் ஆய்வு: தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் முடிவுற்ற பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பணிகளை விரைவாகவும், நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பஞ்சப்பூரில் கட்டப்படும் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 88.40 விழுக்காடு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இறுதிகட்ட பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. பணிகள் அனைத்தும் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைந்து பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் வாா்டு 1-39 வாா்டுகள், 42-44, 48-54 மற்றும் 59 வாா்டு என மொத்தம் 50 வாா்டு மக்கள் பயன் பெறுவா் என்றாா்.
இந்த ஆய்வில், நகரப் பொறியாளா் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் வேல்முருகன் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.