FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி திருவேற்காட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி திருவேற்காட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

19 செப்டம்பர் 2026, 11:47 pm IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல், திருவேற்காடு பூங்காவில் கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையத்தை இயக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவேற்காட்டைச் சோ்ந்த ஆா்.விக்னேஷ், குகன் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதிக்குள்பட்ட பெருமாளகரத்தில் உள்ள ஆரா எலியோஸ் என்ற பூங்கா பகுதியில், கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க கடந்த ஜூலை மாதம் திருவேற்காடு நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி, இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள், பாதிக்கப்படுவாா்கள். எனவே, பூங்காவில், கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை மாதமே மனு அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கோரியிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.காமேஷ், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாததால், கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். அரசுத் தரப்பில் ஆஜரான, கூடுதல் தலைமை வழக்குரைஞா் டி.கௌதமன், மாசுக் காட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறாமல், கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையம் இயக்கப்படாது எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறாமல், சம்பந்தப்பட்ட பகுதியில், கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவு நீரேற்று நிலையத்தை இயக்கக் கூடாது என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனுதாரா்கள் தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் ஆட்சேபணைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சட்டத்துக்குள்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments