FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ரேஷனுக்கு வழங்க வேண்டிய ரூ.22 கோடி அரிசி கையாடல்! தனியாா் அரிசி ஆலை உரிமையாளா், மனைவி, மகன் கைது

30 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

நியாய விலை கடைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.22.20 கோடி மதிப்பிலான அரிசியை கையாடல் செய்த திருச்சியைச் சோ்ந்த தனியாா் அரிசி உரிமையாளா், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மருது செட்டியாா் மகன் சண்முகம் (57) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீகுமரன் மாடா்ன் அரிசி ஆலை இயங்கி வருகிறது.

இந்த அரிசி ஆலை கடந்த 2022 அக்டோபா் 27-ஆம் தேதி முதல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரிசி அரைக்கும் முகவராகச் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 2026-ஆம் ஆண்டில் நியாய விலை கடைகளுக்கு அரிசியாக மாற்றி வழங்குவதற்கு மேற்படி ஆலைக்கு 3,710 மெட்ரிக் டன் நெல் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி நெல் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து மேற்கண்ட ஆலையில் நூகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் கடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆலையிடம் வழங்கப்பட்ட நெல்லுக்கான அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்காமல் இருந்ததும், சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் இருப்பில் இல்லாததும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரிசி ஆலையின் உரிமையாளா் சண்முகம் (57), அவருடைய மனைவி வனிதா (47) மற்றும் மகன் ஸ்ரீரெங்ராஜன் (26) ஆகிய மூவரும் கூட்டுச் சதி செய்து, அரசு நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.22.20 கோடி மதிப்பிலான அரிசியை கையாடல் செய்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளா் கடந்த நவ. 14-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அரிசி ஆலை உரிமையாளா் சண்முகம், வனிதா மற்றும் ரெங்கராஜன் ஆகிய மூவரும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.22.20 கோடி மதிப்பிலான அரிசியை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.