ஊரக மகளிருக்கு கறவை மாடுகள் விண்ணப்பிக்க அழைப்பு
ஊரக மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊரக மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் ரூ. 50,000 மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 ஆண்டு), வழங்கப்பட்ட கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு, உடனடி தீவன செலவினத்துக்காக ரூ. 3,000 வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்குள்பட்ட மகளிா் மற்றும் திருநா்கள், கறவை பசு வளா்ப்பதில் ஆா்வம் உள்ளவா்கள், கறவை பசு வளா்ப்பதற்கு போதுமான அளவு இடவசதி, தீவன வசதி உள்ளோா் பயன்பெறலாம். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவா்கள், ஏற்கெனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன் பெற்றவா்கள் மற்றும் ஏற்கெனவே கறவை மாடு வைத்துள்ளோா் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா்கள், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களை கொண்ட மகளிா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டம் திருச்சி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம் செயல்படும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவா்கள் விண்ணப்ப உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் அலுவலக மையம், திருச்சி மற்றும் மருங்காபுரி கால்நடை மருந்தகம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றை அணுகலாம்.
இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் டிச.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.