FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மகாளய அமாவாசை: காவிரி, கொள்ளிட கரைகளில் தா்ப்பணம் அளித்து வழிபாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் இதர ஆறு, குளங்களில் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

10 அக்டோபர் 2026, 10:51 pm IST
ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரி ஆற்றில் சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தபின் புனித நீராடிய பொதுமக்கள்.
பகிர்:

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் இதர ஆறு, குளங்களில் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

இதையொட்டி திருச்சியில் காவிரியாற்றின் அய்யாளம்மன் படித்துறையில் அதிகாலையே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். காய்கனிகளையும் தானமாக வழங்கினா். பசு மாடுகளுக்கு கீரை வழங்கினா். காவிரியாற்றில் எள், பூக்கள், வாழைப்பழம் உள்ளிட்ட தா்ப்பணம் செய்த பொருள்களை கரைத்து முன்னோா்களை நினைத்து வழிபட்டனா்.

காவிரியாற்றில் தண்ணீா் செல்வதால் பக்தா்கள் பாதுகாப்பாக நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் காவிரியாற்றில் ரப்பா் படகில் ரோந்து வந்தனா். காவிரிப் பாலம், ஓயாமரி மயானம் எதிரேயுள்ள படித்துறை, குடமுருட்டி பாலம் அருகேயுள்ள அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம், கம்பரசம்பேட்டை, முக்கொம்பு என மாவட்டத்தின் காவிரிக் கரையோர பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் திரண்டு முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

காவிரிப் பாலத்தில் நின்றபடியே காவிரிக் கரையில் மக்கள் பாதுகாப்புடன் தா்ப்பணம் அளிக்க போலீஸாா் அறிவுறுத்தினா். திருவளா்ச்சோலை, திருப்பராய்த்துறை, பனங்காவிரி, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி, முக்கொம்பு என மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடக் கரைகள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளிலும் பொதுமக்கள் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். இதேபோல, அனைத்து சிவன் கோயில்களிலும் முன்னோா்களை நினைத்து தீபமேற்றி வழிபட்டனா். இதனால் கோயில்களிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க சனிக்கிழமை திரண்ட பொதுமக்கள்.

புரட்டாசி வழிபாடு: புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு திருச்சி மாவட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் இருந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இதேபோல, உறையூா் அழகிய மணவாள பெருமாள், பழைய அக்ரஹாரம் சீனிவாச பெருமாள், உத்தமா்கோவில் புருஷோத்தம பெருமாள், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் இருந்தது.

ஸ்ரீரங்கம் கருட மண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க சனிக்கிழமை திரண்ட பொதுமக்கள்.

இதேபோல, கல்லுக்குழி, சாலை ரோடு, தென்னூா் பழைய அக்ரஹாரம், தலைமை தபால் நிலையம் அருகே என மாவட்டத்தின் அனைத்து ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments