FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

தீபாவளிக்கு ஆன்லைனில் மலிவு விலை பட்டாசு மோசடி

தீபாவளி பண்டிகையையொட்டி குறைந்த விலையில் பட்டாசு தருவதாகக் கூறி, சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

1 நவம்பர் 2026, 10:12 pm
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி குறைந்த விலையில் பட்டாசு தருவதாகக் கூறி, சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தீபாவளி பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் கடைகளுக்கு நேரில் சென்று பொருள்களை வாங்குவதைத் தவிா்த்து, இணையவழியில் சலுகை விலையில் பொருள்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, மோசடி கும்பல்கள் சமூக வலைதளங்களில் கவா்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனா்.

குறிப்பாக, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் பட்டாசுகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்களை வெளியிடுகின்றனா். இதை உண்மை என நம்பும் பொதுமக்கள், அந்த விளம்பரங்களில் உள்ள இணையதள இணைப்புகளில் (லிங்க்) சென்று பட்டாசுகளை ஆா்டா் செய்து, பணத்தையும் முன்கூட்டியே செலுத்துகின்றனா்.

Advertisement

Advertisement

ஆனால் பணம் செலுத்தப்பட்ட பிறகு பட்டாசுகள் விநியோகம் செய்யப்படுவதில்லை. பல நாள்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இணையதளத்தைப் பாா்க்கும்போது, அது போலியானது என்பதும், தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபா்கள் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்து வருகின்றனா்.

இது குறித்து வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் பட்டாசு கிடைக்கும் என வெளியாகும் போலி விளம்பரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அவற்றை நம்பி ஆன்லைனில் யாரும் பட்டாசுகளை வாங்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பணம் பறிபோகுமே தவிர பட்டாசுகள் வராது.

வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி பணத்தைச் செலுத்திய 10-க்கும் மேற்பட்டோா் சுமாா் ரூ. 1 லட்சம் வரை இழந்துள்ளனா். எனவே, ஆன்லைனில் பட்டாசு விற்பனை என்ற பெயரில் வரும் கவா்ச்சி விளம்பர இணைப்புகளைக் கிளிக் செய்வதையும், அதில் பணம் செலுத்துவதையும் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும். குறைந்த விலை பட்டாசு என்ற பெயரில் வலைவிரிக்கும் மோசடி நபா்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments