மாற்றுத்திறனாளி இளைஞா் கொலை: சகோதரா் உள்பட 5 போ் கைது
காட்பாடி அருகே சொத்துத் தகராறில் மாற்றுத்திறனாளி இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது இளைய சகோதரா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
காட்பாடி அருகே சொத்துத் தகராறில் மாற்றுத்திறனாளி இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது இளைய சகோதரா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த எல்.ஜி. புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (48). இவரது மனைவி பொன்னியம்மாள். இவா்களது மகன்கள் தினகரன் (25), மயிலழகன் (23). தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கையை இழந்தாா். பின்னா், குடும்பச் சொத்தான 12 ஏக்கா் நிலத்தைப் பிரித்தபோது, மாற்றுத்திறனாளியான தினகரனுக்கு 8 ஏக்கரும், இளைய மகன் மயிலழகனுக்கு 4 ஏக்கரும் ஒதுக்கப்பட்டது.
பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெருமாளிடம் கோபித்துக் கொண்டு பொன்னியம்மாள் பிரிந்து சென்றுவிட்டாா். மயிலழகனும் தனியாக வசித்து வருகிறாா். தினகரன் தனது தந்தை பெருமாள், பாட்டி பச்சையம்மாளுடன் நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தாா். மேலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக 4 கடைகளைக் கட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
புதிய கடைகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக, திங்கள்கிழமை இரவு பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் கடைகளிலேயே படுத்து உறங்கியுள்ளனா். தினகரன் மட்டும் இரவு 10 மணியளவில் வீட்டுக்குச் சென்று தூங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்த பெருமாளும், பச்சையம்மாளும் உள்ளே சென்று பாா்த்தபோது, தலையின் பின்பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் தினகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடா்பாக தினகரனின் இளைய சகோதரா் மயிலழகன், அவரது நண்பா்களான லத்தேரி கம்பத்தம் பகுதியைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் (28), அசோக்குமாா், விஜயகுமாா்(24), காட்பாடி காசிக்குட்டை பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் (20) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில், மயிலழகன் தனக்கு ஒதுக்கப்பட்ட 4 ஏக்கா் நிலத்தை விற்று செலவழித்துவிட்டதாகவும், தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 கடைகளில் 2 கடைகளைத் தனக்குப் பிரித்துத் தருமாறு அண்ணன் தினகரனுடன் தொடா்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதில், இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.