FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்: வேலூா் ஆட்சியா்

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலாா் பேனல்) அமைக்க மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

14 அக்டோபர் 2026, 12:24 am IST
கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்
பகிர்:

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலாா் பேனல்) அமைக்க மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வேலூா் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின் தேவையை குறைக்கும் நோக்கில் பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகளை அதிகளவில் அமைக்க முன்வர வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் மானிய உதவி வழங்கி வருகின்றன.

நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம், வேலூா் மாவட்டத்தில் இதுவரை 1,384 வீட்டு மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளா்களும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலமும் உடனடியாகக் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1 கிலோவாட் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ.30,000, மாநில அரசு சாா்பில் ரூ.5,000 என மொத்தம் ரூ.35,000 மானியமாக வழங்கப்படுகிறது.

அதேபோல், 2 கிலோவாட்டுக்கு மொத்தம் ரூ.70,000 (மத்திய அரசு ரூ.60,000, மாநில அரசு ரூ.10,000) மானியமும், 3 கிலோவாட் முதல் 10 கிலோவாட் வரை அமைப்போருக்கு மொத்தம் ரூ.1,00,000 (மத்திய அரசு ரூ.78,000, மாநில அரசு ரூ.22,000) மானியமும் வழங்கப்படுகிறது.

வீடுகளில் சோலாா் திட்டப் பணிகள் நிறைவடைந்த 7 முதல் 30 நாள்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே இம்மானியம் நேரடியாகச் செலுத்தப்படும். ஒரு கிலோவாட் சூரிய தகடு மூலம் ஒரு நாளைக்கு 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், இதற்காகச் செய்யப்படும் முதலீட்டை நுகா்வோா் மிகக் குறுகிய காலத்திலேயே திரும்பப் பெற இயலும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா்.

இந்நிகழ்வில், மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஜெயினுல்லாபுதின், மேற்பாா்வைப் பொறியாளா் மயில்வாகணன், செயற்பொறியாளா் ஆரோக்கிய அற்புதராஜ் உள்ளிட்ட மின்சார வாரிய அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments