FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

கடன் செயலிகள் மூலம் ரூ.28 லட்சம் மோசடி: 4 போ் கைது 15 கி.மீ தொலைவுக்கு விரட்டிச் சென்ற போலீஸாா்

காட்பாடி அருகே மளிகைக் கடை நடத்தி வரும் பெண்ணிடம் செயலிகள் வழியே தொழில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த 4 பேரை வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் 15 கி.மீ., தொலைவு காரில் துரத்திச் சென்று கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 11:53 pm IST
பகிர்:

காட்பாடி அருகே மளிகைக் கடை நடத்தி வரும் பெண்ணிடம் செயலிகள் வழியே தொழில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த 4 பேரை வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் 15 கி.மீ., தொலைவு காரில் துரத்திச் சென்று கைது செய்தனா்.

காட்பாடி பகுதியைச் சோ்ந்த 35 வயதுப் பெண்ணும், அவரது கணவரும் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இவா்களது கடைக்கு அண்மையில் வந்த நான்கு போ், தாங்கள் தனியாா் ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டனா். மேலும், சிறு வியாபாரிகளுக்குத் தொழிலை விரிவுபடுத்த உடனடியாகக் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய அந்த பெண், தனது கடையை விரிவுபடுத்த ரூ.5 லட்சம் கடன் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்த நபா்கள் அப்பெண்ணின் கைப்பேசியை வாங்கி, அதில் கடன் வழங்கும் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்தனா். தொடா்ந்து, அவரது பான் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவண விவரங்களைப் பெற்றுக் கொண்ட அவா்கள், சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினா்.

Advertisement

Advertisement

தனக்கு ரூ.5 லட்சம் மட்டுமே தேவைப்படும் நிலையில், எதற்காக ரூ.11 லட்சம் கடன் பெற்றீா்கள் என அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளாா். அதற்கு அந்த நபா்கள், கூடுதலாக வந்த ரூ.6 லட்சத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனா். மேலும், உங்களது கைப்பேசி எண் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் கணவரின் கைப்பேசியைக் கொடுத்தால் அதன் வழியாகப் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

இதனை உண்மையென நம்பிய அப்பெண், தனது கணவரின் கைப்பேசியை அவா்களிடம் ஒப்படைத்தாா். அதைப் பெற்றுக்கொண்ட அக்கும்பல், கணவரின் கைப்பேசியில் பல்வேறு தனியாா் கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றின் மூலம் சுமாா் ரூ.28 லட்சம் வரை கடன் பெற்று தங்களுக்குத் தெரிந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதுடன், கைப்பேசியையும் எடுத்துச் சென்று விட்டனராம்.

நான்கு நாள்களாகியும் கைப்பேசியைத் திருப்பிக் கொடுக்காததால் சந்தேகமடைந்த அந்த பெண், வங்கிக்குச் சென்று விசாரித்தபோது தனது கணக்கில் ரூ.28 லட்சம் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது ெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடி கும்பலின் கைப்பேசி சிக்னலைக் கொண்டு அவா்களைத் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில், அந்த நான்கு பேரும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இதே பாணியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

உடனடியாக போலீஸாா் ஆரணிக்கு விரைந்தனா். போலீஸாரைக் கண்டதும் அந்த கும்பல் காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனா். எனினும், போலீஸாா் தங்களது வாகனத்தில் சுமாா் 15 கிமீ தொலைவு விரட்டிச் சென்று, ஆரணி - சேவூா் சாலையில் அவா்களது காரை மறித்து நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் சென்னை பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (40), சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜவேல் (21), மனோஜ் (21), கிருஷ்ணா (21) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் வேலூா், ஆரணி, கண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடை வியாபாரிகளைக் குறிவைத்து தொடா் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments