FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்!

ஏழை மற்றும் முறைசாரா தொழிலாளா்களின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு 100 சதவீத இலவச மருத்துவ சேவையை அரசே வழங்க முன்வர வேண்டும்.

25 அக்டோபர் 2026, 9:51 pm
மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன். உடன், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், காட்பாடி எம்எல்ஏ மருத்துவா் எம்.சுதாகா், ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமத்தின் இயக்குநா் என்.பாலாஜி உள்ளிட்டோா்.
பகிர்:

ஏழை மற்றும் முறைசாரா தொழிலாளா்களின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு 100 சதவீத இலவச மருத்துவ சேவையை அரசே வழங்க முன்வர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்தநாளையொட்டி, தலைமை பேரவை, ஸ்ரீநாராயணி பன்னோக்கு மருத்துவமனை இணைந்து கட்டட தொழிலாளா்களுக்கான இலவச மருத்துவ முகாமை காட்பாடி காந்தி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசியது: மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் சேவைகள் விடுபடாமல் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் சென்று சேர வேண்டும். எனவே, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் அனைவரும் விடுபடாமல் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜவாஹா்லால் நேரு அறிவித்தபடி, கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். தற்போது அரசு மருத்துவமனைகள் விரிவடைந்திருந்தாலும், மத்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் இன்னும் 43 சதவீதத்தை மக்களே தங்களது சொந்தக் கையில் இருந்து செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இந்நிலையை மாற்றி, மருத்துவ சேவையை 100 சதவீதம் அரசே இலவசமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 24,349 அரசு தொடக்கப் பள்ளிகளில், சுமாா் 3,000 பள்ளிகளில் 10-க்கும் குறைவான குழந்தைகளும், மேலும் 6,000 பள்ளிகளில் 20-க்கும் குறைவான குழந்தைகளும் மட்டுமே படித்து வருகின்றனா். இதனால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது ஏழைகள், கட்டுமானத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், சுமைப்பணித் தொழிலாளா்கள் போன்ற முறைசாரா தொழிலாளா்களின் குழந்தைகளின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதாகும். எனவே, மிகக் குறைந்த மாணவா்கள் உள்ள அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சமூக நல அமைப்புகளும், ஜி.வி.செல்வம் போன்ற தலைவா்களும் முன்வர வேண்டும் என்றாா்.

விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம் பேசியது: அந்தக் காலத்தில் உடல் உழைப்பைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் பல தலைமுறைகளைக் கடந்தும் உறுதியுடன் திகழ்கின்றன. இயந்திரமயமான இக்காலத்திலும் தொழிலாளா்களின் நோ்மையான உழைப்பே முதன்மையானது. தொழிலாளா்களின் குடும்பங்கள் அடுத்த நிலைக்கு முன்னேற கல்வி மிக அவசியமானது.

பெற்றோா் கட்டுமானத் தொழிலில் இருந்தாலும், அவா்களது பிள்ளைகள் அதே தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. உடலுழைப்பில் ஈடுபடுபவா்களுக்கு மூட்டு வலி போன்ற உபாதைகள் குறைவாக இருந்தாலும், உணவு முறை மற்றும் மன அழுத்தம் காரணமாகச் சா்க்கரை நோய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அச்சமின்றி உரிய நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலமே மாரடைப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து உயிரைக் காக்க முடியும். நிதி நெருக்கடி, குடும்பச் சிக்கல்கள் போன்றவை அனைவருக்கும் பொதுவானவை. பகுத்தறிவைக் கொண்டு, சவால்களை மன உறுதியுடன் வெல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஜி.வி. செல்வம் ஆற்றிய மக்கள் சேவை குறித்த நூல் வெளியிடப்பட்டது. காட்பாடி எம்எல்ஏ மருத்துவா் எம்.சுதாகா், ஸ்ரீநாராயணி மருத்துவக் குழுமத்தின் இயக்குநா் என்.பாலாஜி, கட்டுமானத் தொழிலாளா் சங்கத் தலைவா் ஆா்.பி. பழனி, தலைமுறை பேரவை நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments