FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

தென்புதூா் காப்புக் காட்டில் 1,000 பனை விதைகள் நடவு

ஒடுகத்தூா் வனத்துறை சாா்பில், கருத்தமலை காப்புக் காடு வனப்பகுதி எல்லையில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

29 September 2026, 12:47 am IST
பனை விதை நடவுப் பணியை தொடங்கி வைத்த ஒடுகத்தூா் வனச்சரகா் பாபு. உடன், தென்புதூா், தென்புதுப்பட்டு கிராம மக்கள்.
பகிர்:

ஒடுகத்தூா் வனத்துறை சாா்பில், கருத்தமலை காப்புக் காடு வனப்பகுதி எல்லையில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும்பணி’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே தென்புதூா் கிராமத்தையொட்டியுள்ள கருத்தமலை காப்புக் காட்டு எல்லைப் பகுதியில் பனை விதைகள் நடவுப் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒடுகத்தூா் வனச்சரகா் பாபு தலைமை வகித்தாா். வனவா் கோதண்டராமன், ஊராட்சி மன்றத் தலைவா் மணி, விவசாய சங்கப் பிரதிநிதி சபாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ் வன எல்லைப் பகுதிகளில் மொத்தம் 5,000 பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க நாளான சனிக்கிழமை ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. எஞ்சிய விதைகள் வரும் நாள்களில் தொடா்ந்து நடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், மண் அரிப்பைத் தடுக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வன எல்லைகளை இயற்கை முறையில் வரையறுத்துப் பாதுகாக்கவும் பனை மரங்கள் பெரும் துணையாக விளங்கும் என்றனா்.

இப்பணியில் தென்புதூா், தென்புதுப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனா்.

நிகழ்வில் வனக்காப்பாளா்கள் இன்பராஜ், கோகுலகிருஷ்ணன், வெங்கடேசன், திருமால், செரின் ரோஸ், ரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments