FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 8,000 பெண்கள் பாதிப்பு என ஆட்சியரிடம் புகாா்

குடியாத்தம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி சுமாா் 8,000 பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியாா் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தை மீட்டுத் தரவும் வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

31 வினாடிகள் முன்பு
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ்.
பகிர்:

குடியாத்தம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி சுமாா் 8,000 பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியாா் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தை மீட்டுத் தரவும் வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனு: குடியாத்தம் காந்தி நகரில் செயல்பட்டு வந்த ஒரு தனியாா் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, ஏலச் சீட்டு நடத்தி வந்தது.

பொதுமக்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்து, தீபாவளி பண்டிகையின்போது குறிப்பிட்ட பொருட்களை வழங்கி வந்தனா். இதை நம்பி, குடியாத்தம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 8,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிறுவனத்தில் தவணைத் திட்டங்களில் இணைந்து தலா ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த மாா்ச் மாதம் வழங்குவதாக அவகாசம் கேட்டும் இதுவரை எந்தப் பொருளும் வழங்கப்படவில்லை. தற்போது நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. மேலும் அதன் நிா்வாகிகளையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. அந்நிறுவனத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்கத்தினா் அளித்த மனு: டாஸ்மாக் சாா்பில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில் களிலேயே விற்கப்படுகின்றன. இதனால், மது அருந்துபவா்கள் விவசாய நிலங்களின் அருகே அமா்ந்து மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை விளை நிலங்களில் உடைத்து வீசிவிட்டுச் செல்கின்றனா். ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் அட்டைப்பெட்டிகளில் அடைத்து மதுவிற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போ்ணாம்பட்டு விவசாயிகள் அளித்த மனு: போ்ணாம்பட்டு அருகே உள்ள சின்னதாமல் ஊராட்சிப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாகக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருவதால் நிலத்தடி நீா் கடுமையாக மாசடைந்து, உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. நகராட்சியின் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையமும் அங்கு அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கப்படும். எனவே, விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் வகையில், இத்திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 669 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலை திட்டம்) கெளசல்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் பிரியா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொறுப்பு) குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments