நான்கு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியரகத்தில் விவசாயிகள் மனு
மருதாடு-மடப்பட்டு நான்கு வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
மருதாடு-மடப்பட்டு நான்கு வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் கோ.மாதவன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: கடலூர் மாவட்டத்தில் மருதாடு முதல் மடப்பட்டு வரை சுமார் 43 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைய உள்ளது.
இந்தச் சாலை அமையும் இடம் முழுக்க, முழுக்க விவசாய நிலங்களாகும். தற்போது, நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் தனியார் முகமைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சாலையால் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இவை அனைத்தும் முப்போகம் விளையும் நிலங்களாக உள்ளதால் விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்படும். அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
இதற்கு மாற்றாக செம்மண்டலம் - மேல்பட்டாம்பாக்கம் வரையிலான சுங்கச் சாலையை விரிவுப்படுத்தலாம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
சங்கச் செயலர் ப.ராமானுஜம், ஒன்றியச் செயலர் ப.காந்தி, நிர்வாகிகள் ஆர்.தென்னரசு, ச.சம்பத், சகா.பிரசாத், அ.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.