சென்னைக்கு மணல் கடத்திய 26 லாரிகள் பறிமுதல்
உரிய அனுமதியின்றி சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற 26 லாரிகளை குறிஞ்சிப்பாடி போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
உரிய அனுமதியின்றி சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற 26 லாரிகளை குறிஞ்சிப்பாடி போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வழியாக இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளுக்கு மணலை கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. எனவே, மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய
தகவல் கிடைத்தது.
குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீஸார் வெங்கடாம்பேட்டை, மீனாட்சிப்பேட்டை, பொட்டவெளி ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் உரிய அனுமதியின்றி சென்னைக்கு மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, 26 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், லாரி ஓட்டுநர்களான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி (31), ஜெயக்குமார் (29), சக்திவேல் (32), ஏழுமலை (38), பெருமாள் (38), ரத்தினக்குமார் (38), செந்தில்குமார் (38), செங்கல்பட்டைச் சேர்ந்த சுரேஷ் (28), கன்னியப்பன் (32), மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெயபால்(36), விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30), கோபால் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடி தலைமறைவான 14 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.