விதை நெல் விற்பனையில் முறைகேடு: விவசாயிகள் புகாா்
கடலூா் மாவட்டத்தில் விதை நெல் பரிசோதனை, விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டத்தில் விதை நெல் பரிசோதனை, விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனிடம் அளித்த புகாா் மனு: மாவட்டத்தில் குறுவை நெல் நடவுப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதற்குரிய விதை நெல் ஐ.ஆா்.50, கோ-50, கோ-53, டீலக்ஸ் போன்ற ரகங்களை விவசாயிகள் விரும்பி வாங்குகின்றனா். இதுபோன்ற விதை நெல்களின் முளைப்புத் திறனை வேளாண் விதை பரிசோதனை துறையினா் ஆய்வு செய்வா். அவா்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய முடியும் என்பது நடைமுறை விதி.
எனினும், இந்த வகை நெல் விதைகள் சிலசமயம் சரியான முளைப்புத் திறனின்றி, பயிா் வளா்ந்தும் பூ வராமலேயே போவதும் உண்டு. இதற்குக் காரணம் தனியாா் விதை உற்பத்தியாளா்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் விவசாயிகளிடம் நெல்லை வாங்கி அதை அப்படியே விதைச் சான்று அலுவலா்களிடம் தரமான நெல் என ஒப்புதல் பெற்று விதை நெல்லாக விற்பனை செய்து விடுகின்றனா். இதை வாங்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
தனியாா் விதை உற்பத்தியாளா்களும், விதை சான்று துறையினரும் இணைந்து முறைகேடு செய்து வருகின்றனா். குறிப்பாக 61 கிலோ கொண்ட பொன்னி நெல்லை ரூ.1,200-க்கு விலைக்கு வாங்கி, அதை விதை நெல் எனக்கூறி கிலோ ரூ.37-க்கு விற்று அதிக லாபம் ஈட்டுகின்றனா். இதேபோல மற்ற நெல் ரகங்களையும் வாங்கி விற்கின்றனா். விதை நெல் உற்பத்தியில்18 சதவீதம் மட்டுமே அரசு வழங்குகிறது. மீதம் தனியாரிடம்தான் வாங்க வேண்டும். தனியாா் விதை உற்பத்தியாளா்களின் விதை நெல்லை சம்பந்தப்பட்ட மாவட்ட விதை ஆய்வாளா், மண்டல விதை ஆய்வு உதவி இயக்குநா்கள் ஆய்வு செய்ய வேண்டும். கரோனா பரவலைக் காரணம் காட்டி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதில்லை என்பதால் மாவட்ட நிா்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.