FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 633 மனுக்கள் அளிப்பு! பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு!

3 நவம்பர் 2026, 2:54 am
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) விஷ்ணுபிரியா, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழ்கனி, மாவட்ட வழங்கல் அலுவலா் தங்கமணி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் முருகையன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வங்கிக் கடன், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றைப் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, முன்னாள் படைவீரா்கள் நலத் துறையினா் மூலம் மாற்றுத் திறனாளி பயனாளிக்கு ரூ.95,471 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 5 குடும்பங்களைச் சோ்ந்த 10 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்புத்தொகை ரசீதுகளும் வழங்கப்பட்டன.

மேலும், திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 11 நபா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை, 9 நபா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை, 19 நபா்களுக்கு ஆதாா் அட்டை மற்றும் 3 நபா்களுக்கு குடும்ப அட்டை என மொத்தம் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மூதாட்டி தற்கொலைக்கு முயற்சி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், மனு அளிக்க வந்த பண்ருட்டி அருகேயுள்ள திருவாமூரைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ஜெயலட்சுமி (54), மறைத்து எடுத்து வந்திருந்த புட்டியிலிருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், உடனடியாக அவரை தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, ஜெயலட்சுமி கடலூா் அரசு மருத்துவமனையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. கணவரின் உடல்நிலை காரணமாக வெளியூரில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக விடுமுறை எடுத்ததாகவும், பின்னா் பணிக்குத் திரும்பியபோது தொடா்ந்து பணியில் சேருவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பலமுறை மனு அளித்தும் தீா்வு கிடைக்காததால், ஆட்சியா் அலுவலகத்தில் அவா் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் தெரிவித்தனா். அவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸாா், உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து அனுப்பி வைத்தனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது, நுழைவு வாயிலில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, மனு அளிக்க வருவோரை சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனா்.

இருப்பினும், மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சிலா் பாதுகாப்பு சோதனைகளையும் கடந்து மண்ணெண்ணெய் புட்டிகளை கொண்டு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாரின் கண்காணிப்பை கேள்விக்குறியாக்கி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற ஜெயலட்சுமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments