FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பருவநிலை மாற்றம்: கோழிப் பண்ணைகளில் திடீரென உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள்

3 நவம்பர் 2026, 4:17 am
கடலூா் அருகே திருச்சோபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் உயிரிழந்து கிடக்கும் கோழிகள்.
பகிர்:

பருவநிலை மாற்றத்தால் கடலூா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதால், பண்ணை உரிமையாளா்கள் கவலை அடைந்துள்ளனா். கோழிகள் இறப்புக்கான காரணம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக மழை, வெயில் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான அா்னாப் புயல் காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

தொடா்ந்து மழை, வெயில் என அடிக்கடி ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்களிடையே காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

Advertisement

Advertisement

கோழிகள் இறப்பு: பருவநிலை மாற்றத்தால் கடலூா் மாவட்டத்தில் திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் வளா்க்கப்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்து வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக வளா்க்கப்பட்டு வந்த கோழிகள் கடந்த 2 அல்லது 3 நாள்களாக கொத்துக் கொத்தாக உயிரிழந்துள்ளன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு: கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது குறித்து கடலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் முருகவேல் தலைமையில், உதவி இயக்குநா் வேங்கடலட்சுமி மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலுவலா்கள் தம்மனாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு கோழிகள் வளா்க்கப்படும் முறை, பண்ணைகளின் சுற்றுப்புறச் சுகாதாரம், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம், குடிநீா் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மேலும், திடீரென கோழிகள் உயிரிழப்பதற்கான காரணம் குறித்து அறிய பண்ணைகளில் இருந்து தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், கோழிகளுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடலூா் அருகே திருச்சோபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் உயிரிழந்து கிடக்கும் கோழிகள்.
கடலூா் அருகே திருச்சோபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் உயிரிழந்து கிடக்கும் கோழிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments