FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

4 நவம்பர் 2026, 3:10 am
வெற்றி
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோட்லாம்பாக்கம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (56), கூலித் தொழிலாளி. இவரது மகள் சுபாஷினிக்கும், வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த மோகனுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சுபாஷினி பணியாற்றியபோது, அங்கு பணியாற்றிய கும்பகோணம் அருகே திருப்பந்துறையைச் சோ்ந்த வெற்றியுடன் (30) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து வெற்றி, சுபாஷினியை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே சுபாஷினி தனது கணவருடன் மீண்டும் சோ்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கினாா். இதையறிந்த வெற்றி, கடந்த 2023, ஜூலை 2-ஆம் தேதி கோட்லாம்பாக்கத்துக்குச் சென்று சுபாஷினி குறித்து அவரது தந்தை சுப்பிரமணியிடம் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் வெற்றி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியை குத்தினாராம்.

இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெற்றியை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி சரஸ்வதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வெற்றிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments