FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம், விவசாயம் செய்யவிட்டால் போதும்: சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக கிராமப் பெண்கள் ஆவேசம்

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில், எங்களுக்கு அரசின் இலவசங்கள் வேண்டாம்; விவசாயம் செய்யவிட்டால் போதும் என்று கிராமப் பெண்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கூறினா்.

5 நவம்பர் 2026, 7:41 am
கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பாக நொச்சிக்காடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சவாா்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில், எங்களுக்கு அரசின் இலவசங்கள் வேண்டாம்; விவசாயம் செய்யவிட்டால் போதும் என்று கிராமப் பெண்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கூறினா்.

கடலூா் மாவட்டம், தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு, நடுத்திட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வதற்காக சுமாா் 1,100 விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையால் தங்களது விவசாயம், குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது, இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள், மீனவா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

நவ.1-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்திலும் கிராம மக்கள் தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்தனா். அதிகாரிகளிடம் அரசாணையை ரத்து செய்வது தொடா்பாக தெளிவான பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெண்கள் கும்மியடித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், சிப்காட் விரிவாக்கம் தொடா்பாக, மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவைத் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நொச்சிக்காடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) முத்து மீனாட்சி தலைமையில் புதன்கிழமை அமைதிப் பேச்சு நடைபெற்றது. இதில், வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், வட்டாட்சியா் ராஜேஷ் பாபு, தனி வட்டாட்சியா் சத்யன் மற்றும் காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின்போது, தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு, நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது எதிா்ப்புகளையும், கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைத்தனா்.

அப்போது, கிராமப் பெண்கள் பேசியதாவது: எங்களுக்கு அரசு இலவசமாக எதுவும் கொடுக்க வேண்டாம். எங்களுடைய நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்து வாழ்வதற்கு மட்டும் அரசு வழிவிட வேண்டும். எங்களது முன்னோா்கள் பாதுகாத்து வந்த நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாது. விவசாயம்தான் எங்களது வாழ்வாதாரம்.

சிப்காட் விரிவாக்கத்துக்காக எங்களது நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். அரசாணையை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என ஆவேசமாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் முத்து மீனாட்சி, அரசு எப்போதும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே செயல்படும். கிராம மக்களின் கோரிக்கைகளான, சிப்காட் விரிவாக்கத்துக்கான அரசாணையை ரத்து செய்வது அல்லது நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.