விருத்தாசலம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
விருத்தாசலம் அருகே குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே காா்குடல் அணைக்கட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள
குடிநீருக்கான ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டாா் பழுதடைந்ததால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், குடிநீருக்காக அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகளுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் பொதுமக்கள், ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து காலிக் குடங்களுடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.