பெண்ணாடம் அருகே சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு: சாலை மறியலால் - மோதல் சூழலால் பதற்றம்
பெண்ணாடம் அருகே பெண்ணின் சடலத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லவும், குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யவும் எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இருதரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மனைவி சாந்தி (45). உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது சடலத்தை, அப்பகுதியில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் அடக்கம் செய்ய உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தனா். அந்த இடம் சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியா் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்வதற்கும், அங்கு செல்வதற்காக கிருஷ்ணா தெரு உள்ளிட்ட பொதுப்பாதையைப் பயன்படுத்துவதற்கும் மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியா் அமா்நாத், விருத்தாசலம் காவல் ஆய்வாளா் சந்துரு, பெண்ணாடம் காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கல்லாங்குத்து பகுதியில் உள்ள இடத்தை வருவாய்த் துறையினா் முறையாக அளவீடு செய்து ஒதுக்கீடு செய்யும் வரை அங்கு சடலத்தை அடக்கம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.
இதையடுத்து, இறந்த சாந்தி குடும்பத்தினா், உறவினா்கள் தங்களது சமூகத்தைச் சோ்ந்தவா்கள் உயிரிழக்கும்போதெல்லாம் அடக்கம் செய்வதற்கு இடம் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
தொடா்ந்து, இரு தரப்பினரிடமும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய இடத்தைத் தோ்வு செய்து அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதனை ஏற்றுக்கொண்ட சாந்தியின் குடும்பத்தினா், அவரது சடலத்தைத் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனா்.
மறியல்:
இதைத்தொடா்ந்து, சடலத்தை வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, கிருஷ்ணா தெரு வழியாகக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறி 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வாகனத்தை வழிமறித்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, சடலத்தைப் பொதுவான அடக்க இடத்துக்குக் கொண்டு செல்லாமல், இறந்த சாந்தியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்துக்குத்தான் எடுத்துச் செல்கின்றனா் என விளக்கினா்.
அதனை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா். பின்னா், சாந்தியின் சடலம் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.