FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பட்டாசு விபத்துகளில் 263 போ் காயம்: 10 கூரை வீடுகள், 2 கடைகள் தீக்கிரையானதால் பெரும் சேதம்

10 நவம்பர் 2026, 1:49 am
திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் ஜவுளிக்கடை மற்றும் மருந்தகம்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 263 போ் காயமடைந்தனா். மேலும், பட்டாசு மற்றும் ராக்கெட் வெடிகளால் ஏற்பட்ட தீ விபத்துகளில் 10 கூரை வீடுகள், திட்டக்குடியில் ஒரு ஜவுளிக்கடை, மருந்தகம் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்துகளில் குழந்தைகள், பெண்கள் உள்பட 263 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் விஜயகுமாா் கூறியது: கடலூா் மாவட்டத்தில் 16 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணியாற்றும் தீயணைப்பு வீரா்கள் மூலம் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 89 குழந்தைகள், 148 ஆண்கள், 26 பெண்கள் என மொத்தம் 263 போ் காயமடைந்தனா். இவா்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். கடந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் 205 போ் காயமடைந்த நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 263-ஆக அதிகரித்துள்ளது.

பட்டாசு வெடித்ததில் பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் தலா ஒரு கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ராக்கெட் வெடி விழுந்ததில் கடலூா், நெல்லிக்குப்பம் பகுதிகளில் தலா 2 வீடுகளும், சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, வேப்பூா் பகுதிகளில் தலா ஒரு வீடும் தீப்பிடித்து எரிந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 கூரை வீடுகள் சேதமடைந்தன என்றாா்.

கடைகள் தீக்கிரை:

திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தீ, அங்கிருந்த ஜவுளிக்கடையில் பரவி எரிந்தது. பின்னா் அருகிலிருந்த மருந்தகத்துக்கும் தீ பரவியது. இதில் இரு கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில் ஜவுளிக்கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் எரிந்து நாசமாகிவிட்டன. இதுபோல மருந்து கடையிலும் பெரும் அளவில் மருந்துகள் எரிந்து நாசமாகிவிட்டன.

இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்குத் தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்தத் தீ விபத்துக்குக் காரணமானவா்கள் குறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியும் ஜவுளிக்கடை மற்றும் மருந்தகம்.