FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கைப்பேசியை தவிா்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுரை

மாணவா்கள் கைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்த்து, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ்வில் உயா்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

13 நவம்பர் 2026, 10:39 pm
திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாணவிகளுக்கு கேக் கொடுத்து வாழ்த்து அட்டை வழங்கிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

மாணவா்கள் கைப்பேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்த்து, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ்வில் உயா்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் 2.03 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு கேக் மற்றும் 52,227 அங்கன்வாடி குழந்தைகளுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சியை திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், 1,584 மாணவிகளுக்கு அமைச்சா் கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கடலூா் நத்தவெளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் குழந்தைகளுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்கும் திட்டத்தை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 2,023 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52,227 குழந்தைகளுக்கும் சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: தமிழக முதல்வா் பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.கல்வி என்பது மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறை மட்டுமல்ல; வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைவதற்கான அடித்தளமாகும். மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு, நோ்மை ஆகிய பண்புகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கைப்பேசிகளைத் தேவையற்ற வகையில் பயன்படுத்துவதைத் தவிா்த்து, படிப்பு, விளையாட்டு, புத்தக வாசிப்பு உள்ளிட்ட பயனுள்ள செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். தங்களுக்கென உயா்ந்த இலக்குகளை நிா்ணயித்து, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் அங்கன்வாடி மையப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டடங்கள் திறப்பு:

இதைத்தொடா்ந்து, கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.75 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் வட்டார பொது சுகாதார மைய என மொத்தம் 7 மருத்துவமனை கட்டடங்களை , ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், அமைச்சா் ப.ராஜ்குமாா் திறந்து வைத்தாா். அப்போது பேசிய அவா், இந்த கட்டடங்களை சுகாதாரத்துறை அலுவலா்கள் மற்றும் மருத்துவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சிகிச்கைகளை வழங்கிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் நகா் மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பாலகணேஷ், உட்பட பலா் கலந்து கொண்டனா்.