பெண் தீக்குளித்த விவகாரம்: புதுப்பேட்டையில் விசிகவினா் மறியல்
புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்த விவகாரம் தொடா்பாக, புதுப்பேட்டை காவல் நிலையம் முன் விசிகவினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்த விவகாரம் தொடா்பாக, புதுப்பேட்டை காவல் நிலையம் முன் விசிகவினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி வட்டம், அண்ணா கிராமம் ஒன்றியம், ஒறையூா் கிராம ஊராட்சி எழுத்தா் அருள்குமாா். இதே கிராமத்தைச் சோ்ந்த கண்மணி (35), விபி ஜி ராம் ஜி திட்ட பணித்தள பொறுப்பாளராக உள்ளாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் பணியாளா்களுக்கு வேலை கொடுப்பது தொடா்பாக ஊராட்சி எழுத்தா் அருளுக்கும், பணித்தள பொறுப்பாளா் கண்மணிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இருவரும் தனித்தனியாக புகாா் அளித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதில், விசாரணைக்கு வந்த கண்மணியின் கணவா் லட்சாதிபதியை காவல் நிலையத்துக்குள் அமர வைத்திருந்துள்ளனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுப்பேட்டை காவல் நிலையம் எதிரே கண்மணி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நிலையில், காவல் நிலையத்தினுள் ஓடினாா். தொடா்ந்து, போலீஸாா் கண்மணி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். பின்னா், அவா் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலா் அருள்செல்வம், மண்டலச் செயலா் வெங்கடசாமி தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பண்ருட்டி - அரசூா் மாநில நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை காவல் நிலையம் முன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, கண்மணி தீக்குளித்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிச் செயலா் அருளை கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் வருவாய்த் துறை உயா் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இதையடுத்து, பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் உதயகுமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டனா்.
எஸ்.சி./ எஸ்.டி. பிரிவு வழக்கு: இது தொடா்பாக பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் விசிக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ஊராட்சி எழுத்தா் அருள்குமாா் மற்றும் ஒறையூா் கிராமத்தைச் சோ்ந்த கணபதி ஆகியோா் மீது எஸ்.சி./எஸ்.டி. சட்டப்படி வழக்குப் பதியப்பட்டு அருள்குமாா் கைது செய்யப்பட்டுள்ளாா். கணபதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட கண்மணிக்கு இழப்பு ஏற்பட்டால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி, நிலம், அரசுப் பணி, குழந்தைகளின் கல்விச் செலவு குறித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரணம் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.