முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: ஜீப் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

29 நவம்பர் 2026, 3:11 am
சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: ஜீப் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் அருகே சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், ஜீப் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் தனசேகரன். இவா் கடந்த 2022 பிப்ரவரி 7 -ஆம் தேதி மாலை, கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகன் லோஷித்தை பைக்கில் அழைத்துக் கொண்டு கடலூா் - மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வெள்ளப்பாக்கம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் எதிா்பாராதவிதமாக தனசேகரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தனசேகரனும், அவரது மகன் லோஷித்தும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுவன் லோஷித் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ஜீப்பை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பண்ருட்டி அருகே உள்ள பகண்டை, பாபுகுளம் பகுதியைச் சோ்ந்த விக்ரம் (25) மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரமுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.